சாதியை காரணம் காட்டி துரத்தும் ஊர் மக்கள்?..."கருணைக் கொலை செய்து விடுங்கள்" - கண்ணீருடன் கோரிக்கை வைத்த மாற்றுத்திறனாளி பெண்
வீட்டு மனை பட்டா தராவிட்டால் தங்களைக் குடும்பத்துடன் கருணைக் கொலை செய்து விடுமாறு மாற்றுத்திறனாளி பெண் கண்ணீருடன் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி லட்சுமி, உடல் நலன் பாதிக்கப்பட்ட தனது குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி கணவருடன் வசித்து வருகிறார்... இவர்கள் சிதிலமடைந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். வீடு இடிந்து விழும் நிலையில் உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தான் பதில் கூற வேண்டி இருக்கும் என்பதற்காக வீட்டின் உரிமையாளர், லட்சுமி குடும்பத்தை வெளியேற்ற வற்புறுத்தி வருவதாகத் தெரிகிறது. இருக்க இடமின்றி தவித்து வரும் லட்சுமி தனக்கு வீடு ஒன்று கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். மேலும், இருக்க இடம் கொடுக்காவிட்டால் தங்களைக் கருணைக் கொலை செய்து விடுமாறு கண்ணீர் மல்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், அரசு புறம்போக்கு இடத்தில் வீட்டு மனை பட்டா வழங்க ஆட்சியர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்ட நிலையில், கிராம நிர்வாக அலுவலர் அவ்வூரில் எங்குமே இடம் காலியாக இல்லை என தெரிவித்துள்ளார். இதனால், லட்சுமியும் அவரது குடும்பமும் தாங்களே ஒரு புறம்போக்கு நிலத்தைக் கண்டுபிடித்து அங்கு குடியேற முற்பட்ட போது, சாதியைக் காரணம் காட்டி அப்பகுதியினர் லட்சுமி மற்றும் அவரது கணவரை அடித்துத் துரத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.