உம்மன்சாண்டி இல்லத்திற்கு சரிதா நாயர் சென்றாரா? - வழக்கில் திடீர் திருப்பம்... சிபிஐ சொன்ன முக்கிய தகவல்
கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி மீது சரிதா நாயர் கூறிய பாலியல் புகாரில் உண்மையில்லை என, நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக தொழிலதிபர் சரிதா நாயர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு கைதான சரிதா நாயர், அப்போது முதல்வராக இருந்த உம்மன் சாண்டி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 பேர் மீது பாலியல் புகார் அளித்தார். அத்துமீறி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறிய சரிதா நாயரின் குற்றச்சாட்டிற்கு, காங்கிரஸ் மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சரிதா நாயர் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ, திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், உம்மன் சாண்டியால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக புகார் கூறிய சரிதா நாயர், சம்பவம் நடந்த நாளில் முதலமைச்சராக இருந்த உம்மன்சாண்டியின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு செல்லவில்லை என்றும், சரிதா நாயரின் குற்றச்சாட்டு உண்மைக்கு மாறானது என்றும் கூறப்பட்டுள்ளது.