உண்மையில் தனுஷ் யாருடைய மகன்?- "உயிருக்கே ஆபத்து.. மரபணுவை சேகரிங்க"... படுக்கையிலும் பாசப் போராட்டம் நடத்தும் தம்பதி
ஆடுகளம், அசுரன், கர்ணன் என வெற்றித் திரைப்படங்களால் நடிகர் தனுஷின் கேரியர் ஒருபக்கம் எகிறிக் கொண்டிருக்கிறது...ஆனால் மறுபக்கமோ தனுஷ் தங்களுக்குப் பிறந்த மகன் என மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி தொடர்ந்த நீதிமன்ற வழக்கும் கவனத்தை எட்டிப்பிடிக்கும்.. கஸ்தூரிராஜா - விஜயலட்சுமியின் மகன்தான் தனுஷ் என வெளி உலகமும் அவரின் ரசிகர்களும் அறிந்திருந்த நிலையில், இந்த வழக்கு தனுஷின் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
தற்போது தனுஷ் என அழைக்கப்படுபவர், தங்களது மூத்த மகன் கலையரசன் தான் என்றும், பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும்போது அவர் காணாமல் போனதாகவும் மதுரை மேலூர் தம்பதியின் பரிதவிப்பாக உள்ளது. திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா - விஜயலட்சுமியின் தம்பதியின் பிள்ளைகளான செல்வராகவன், விமலா கீதா, கார்த்திகா தேவி ஆகிய 3 பேரும், உயர் படிப்பு படித்திருக்கும் நிலையில், தனுஷ் மட்டும் ஏன் படிக்கவில்லை? என கதிரேசன் - மீனாட்சி தம்பதி நீதிமன்றத்தில் வைத்த வாதம், ஒருபக்கம் அனைவரையும் சிந்திக்க வைத்தது.
ஏற்கனவே, வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் அவரது அங்க அடையாளத்தை லேசர் மூலம் அழித்ததாகவும், பள்ளிக்கூட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தவறாக தாக்கல் செய்ததாகவும் கதிரேசன் தரப்பில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஒருவேளை இவர்கள் பப்ளிசிட்டிக்காகவும், பணத்துக்காகவும் இப்படி செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும் தனுஷ் எங்கள் மகன் தான் என்பதில் விடாப்பிடியாக இருந்த அந்த தம்பதி நீதிமன்றத்திற்கு அலைந்து திரிந்தனர்..
ஏற்கனவே மரபணு சோதனைக்கு உத்தரவிடக் கோரி, கதிரேசன் - மீனாட்சி தம்பதி தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் சூழலில், தற்போது உடல்நலக் கோளாறு காரணமாக, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், கதிரேசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். கதிரேசனின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பதால், அவரது டிஎன்ஏவை எடுத்து பராமரிக்க வேண்டும் என மருத்துவமனை டீன் ரத்தினவேலிடம், கதிரேசனின் வழக்கறிஞர் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
உண்மையில் தனுஷ் யாருடைய மகன்? கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமி தம்பதியின் மகனா? அல்லது படுக்கையிலும் பாசப்போராட்டம் நடத்தும் கதிரேசன் - லட்சுமி தம்பதியின் மகனா? என்பது முடிவே இல்லாமல் தொடர்கதையாகி இருக்கிறது...எத்தனையோ மருத்துவ வசதிகளும், விஞ்ஞானமும் விரல் நுனியில் அனைத்தையும் சொல்லிவிடும் சூழலில் தனுஷ் யாரின் மகன் என்பதை சொல்லிவிட முடியாதா என்ன? மகனை தொலைத்து தள்ளாத வயதிலும் போராடும் கதிரேசனுக்கு அவரின் மகன் கிடைப்பாரா? என்பதற்கு காலத்தின் கையில் தான் பதில் இருக்கிறது...