முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற DGP.. காருக்குள் பெண் IPS-யிடம் அத்துமீறல் - 2021ல் என்ன நடந்தது? சிக்கியது எப்படி?
தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து சிறை தண்டனை விதித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழகத்தின் கூடுதல் சிறப்பு டிஜிபியாக, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டவர் ராஜேஸ் தாஸ்....
இந்த நியமனம், ஏற்கெனவே உள்ள தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியின் அதிகாரத்தை குறைப்பதாகவும், எடப்பாடி பழனிச்சாமியின் தேர்தல் பணிகளுக்காகவே ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என அப்போதைய எதிர்கட்சிகள் விமர்சனம் செய்தனர்....
இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சென்றிருந்தார்...
அப்போது முதல்வரின் பாதுகாப்புக்காக... சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் உடன் சென்ற நிலையில்... பணியின் போது, பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம், ராஜேஸ் தாஸ் காரினுள் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக புகாரளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...
இந்த புகாரை எதிர்கட்சிகள் கையிலெடுத்து விவகாரத்தை சூடாக்கிய நிலையில், புகாரை விசாரிக்க, தமிழக கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக்குழுவை தமிழக அரசு நியமித்தது...
இதையடுத்து, ராஜேஸ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு குறித்தான விசாரணையும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து அப்போதைய தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்....
இதனிடையே, இந்த பரபரப்பு விவகாரத்தில் அன்றைய செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதாவது, ராஜேஸ் தாஸால் பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி, தனக்கு நேர்ந்ததை உயர் அதிகாரிகளிடம் புகாரளிக்க சென்னை வந்திருக்கிறார்...
அப்போது, அவரை வழிமறித்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன், பெண் ஐபிஎஸ் அதிகாரியின் கார் சாவியை பறித்து, அவரை ராஜேஸ்தாஸிடம் அழைத்து சென்று பேச வைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது...
இந்த வழக்கின் விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 12 ஆம் தேதி, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் ராஜேஷ் தாஸ் தரப்பிலான வழக்கறிஞர்கள் தங்களின் வாதங்களை முன்வைத்தனர்....
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை குற்றவியல் நீதிபதி, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் மற்றும் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்பது நிரூபணமானது என தீர்ப்பளித்தார்...
தொடர்ந்து, முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்த நீதிபதி, எஸ்பி கண்ணனுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்...
வழக்கின் தீர்ப்பு வெளியான சில மணி நேரத்திலேயே ராஜேஸ் தாஸ் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில், மனுவை பரிசீலனை செய்த விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கிய நிலையில், தண்டனையை ஜூன் 17 ஆம் தேதி நிறுத்தி வைத்து தீர்ப்பளித்தது...
அதற்குள் மேல்முறையீடு செய்து அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனையுடன் நீதிபதி ஜாமின் வழங்கிய நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார் ராஜேஸ் தாஸ்....