விசாரணைக் கைதி மரணம்...காவலர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்ட பணி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊர்வலம்
காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் பி என் பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி 2015ல் கொலை,கொள்ளை வழக்கில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காவல் நிலையத்தில் அவர் திடீரென உயிரிழந்த நிலையில், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் போராட்டத்தால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், காவலர் சவுமியன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு, இது கொலையாகாத மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பிறகு கொலையாகாத மரணம் என்பது கொலையாக மாற்றப்பட்டு 3 போலீசார் மீதும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும், கடலூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. இதனிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு தற்போது மீண்டும் பணி வழங்கப்பட்டு வடலூர் காவல் நிலையத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். காவலர்கள் பணியிடை நீக்கம், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலம் சென்றனர்... போலீசாரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சிறிது நேரம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.