டெல்லி உள்ளாட்சித் தேர்தல் - விவாதமான கெஜ்ரிவாலின் வாக்குறுதி | AAP | Delhi
குஜராத் பிரச்சாரம் ஒரு பக்கம் இருக்க, டெல்லி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் கெஜ்ரிவாலின் வாக்குறுதியும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், அங்கு உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவருகிறது. டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக ஆளும் கட்சியான ஆம் ஆத்மி, எதிர்க்கட்சியான பாஜக ஆகியவை சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
வெள்ளி மாலையுடன் பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், தெற்கு டெல்லியின் பாஞ்ச்சில்லா கிளப்பில் குடியிருப்போர் சங்கத்தினர் மத்தியில் கெஜ்ரிவால் பேசினார். அப்போது, குடியிருப்போர் சங்கங்களை மினி கவுன்சிலராக ஆக்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார்.
ஒரு வார்டில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அங்குள்ள அனைத்து குடியிருப்போர் சங்கங்களுக்கும் பொறுப்பு எனும் நிலையில், குடியிருப்போர் சங்கத்தை அந்தந்தப் பகுதி அளவுக்கு மினி வார்டு போல செயல்படும் படியாக, புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று கெஜ்ரிவால் கூறினார்.
அதன்படி குடியிருப்போர் நல சங்கங்களுக்கு பொருளாதார, அரசியல் உரிமைகள் வழங்கப்படும் என்றும்,
பண்டிகை காலங்களில் சிறப்பு நிதியும், பகுதிவாசிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தன்னார்வலர்களை நியமித்துக் கொள்ளும் அதிகாரமும் வழங்கப்படும் என்றும், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் கூறினார்.
மாயூர் விகார், கல்காஜி விரிவாக்கப் பகுதி உள்பட்ட பல பகுதி குடியிருப்போர் சங்கத்தினர் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். இந்தக் கருத்தை ஆலோசிக்கும் கூட்டத் துக்கே சில குடியிருப்போர் சங்கங்களைக் கூப்பிடவில்லை என்ற அதிருப்திக் குரலும் வெளிப்பட்டுள்ளது.