சென்னையை உலுக்கிய சிறுவன் மரணம்.. அப்பா கண் முன் இருந்தும் அறியாமல் நின்ற சோகம்..

x

முறையான பரமாரிப்பின்றியும், வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் நீச்சல் குளம் நடத்தி வந்த, அப்பா, மகனின் மெத்தனப்போக்கு 6 வயது சிறுவனின் உயிரை பறித்திருக்கிறது....

சென்னை போரூரை சேர்ந்தவர் நந்தகுமார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு தாரிகா என்பவருடன் திருமணமாகி 6 வயதில் சஸ்வின் வைபவ் என்ற மகனும், 2 வயதில் ஒரு ஆண்குழந்தையும் இருந்துள்ளது... கோடை விடுமுறையை ஒட்டி ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே நீலமங்கலத்தில் உள்ள தனது அம்மாவின் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் சென்றிருக்கிறார் தாரிகா. கடந்த சில நாட்களாக சென்னை மக்களை வெயில் சுட்டெரித்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் நீச்சல் குளம் செல்ல திட்டமிட்ட தாரிகா, அருகில் உள்ள நீச்சல்குளத்திற்கு மாலை 4 மணியளவில் தனது கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சிலருடன் சென்றிருக்கிறார்...

அங்கு சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்காக தனித்தனியே நீச்சல் குளங்கள் இருந்த நிலையில், சிறுவர்களுக்கான நீச்சல் குளத்தில் தாரிகாவின் 6 வயது மகன் சஸ்வின் வைபவ் இறங்கி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்... உடன் வந்திருந்த உறவினர்கள் பெரியவர்களுக்கான நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருந்த நிலையில், சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான நீச்சல் குளங்கள் அருகருகே அமைந்திருந்ததால், சஸ்வின் வைபவ் விபரீதம் அறியாமல் விளையாட்டு தனமாய் பெரியவர்களுக்கான நீச்சல் குளத்தில் இறங்கியுள்ளார்.இதையாரும் கவனிக்காத நிலையில், சஸ்வின் வைபவின் தாய் தாரிகா, தனது இளைய மகனான இரண்டு வயது குழந்தையை கையில் வைத்துக் கொண்டு நீச்சல் குளத்திற்கு வெளியில் நின்று கொண்டிருந்த நிலையில், அவரும் கவனிக்கவில்லை... இந்நிலையில், குளத்தின் ஆழம் தெரியாமல் உள்ளிறங்கிய சிறுவன், நீரினுள் மூழ்கி தத்தளித்த நிலையில், நீரினுள்ளே தன் உயிரை துறந்திருக்கிறார்...சில நிமிடங்கள் கழித்து மகனை காணவில்லை என தேட ஆரம்பித்த, சஸ்வின் வைபவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பெரியவர்களுக்கான நீச்சல் குளத்தில் சிறுவனின் உடலை கண்டு அதிர்ந்து போயினர்...

விரைந்து சிறுவனை மீட்ட அவர்கள், மூச்சு பேச்சிலாமல் இருந்த சஸ்வின் வைபவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது சோகத்தை ஏற்படுத்தியது... இந்த துயர சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நீச்சல் குளம் முறையான பரமாரிப்பின்றியும், வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்றாமல் செயல்பட்டு வந்ததையும் கண்டறிந்தனர்...

பெரியவர்களுக்கான நீச்சல்குளமும், சிறுவர்களுக்கான நீச்சல் குளமும் ஆபத்தான முறையில் அருகருகே அமைந்திருந்தது... சிறுவர்களுக்கான நீச்சல் குளத்தில், சிறுவர்களை கண்காணிக்க பாதுகாவலர்கள் இல்லாதது... சிறுவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்காதது ... என அனைத்தும் விசாரணையில் அம்பலமாக நீச்சல் குளத்திற்கான மின்சார இணைப்பை துண்டித்த அதிகாரிகள், நீச்சல் குளத்திற்கு சீல் வைத்தனர்...தொடர்ந்து, மரணம் விளைவிக்கும் குற்றத்தைப் புரிந்தவருக்கான இந்திய தண்டனைச் சட்டம் 304 ன் கீழ் நீச்சல் குளத்தின் உரிமையாளர்களான நாகராஜன் மற்றும் அவரது மகன் பிரபுவை கைது செய்த போலீசார் இருவரையும சிறையில் அடைத்தனர்.முறையாக ஒரு செயலை செய்யாமல் அலட்சியத்துடனும், மெத்தனப்போக்குடனும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் மட்டுமே நீச்சல் குளம் நடத்தி வந்த இருவர், அப்பாவி சிறுவன் உயிர் பறிபோக காரணமாயிருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்