டாஸ்மாக் மதுபானத்தில் சயனைடு !பிளாக்கில் மதுவாங்கி குடித்த இருவர் பலி...

x

மதுவால் மரணித்தவர்கள் குப்புசாமி மற்றும் விவேக். 68 வயதான குப்புசாமி தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்.மீன் வியாபாரியான இவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில் தான் சம்பவம் நடந்த அன்று காலையிலேயே கீழ்வாசல் மீன் மார்க்கெட் எதிரே உள்ள பாரில் பிளாக்கில் குவாட்டர் வாங்கி குடித்திருக்கிறார். அந்த குவாட்டரை ஷேர் செய்ய வந்தவர் தான் 36 வயதான விவேக்.கார் டிரைவரான இவர் கீழவாசல் பூமால்ராவுத்தன் பகுதியை சேர்ந்தவர்.இருவரும் கட்டிங் ஷேரிங் என்ற கலாச்சாரத்தில் குவாட்டரை பங்கு போட்டு குடித்ததாக தெரிகிறது. மது வயிற்றுக்குள் சென்ற மறுகணமே வேலையை காட்ட தொடங்கி இருக்கிறது.இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார்கள். உடனே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதில் குப்புசாமி வழியிலேயே இறந்து போயிருக்கிறார்.அடுத்த இரண்டு மணி நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி விவேக்கின் உயிரும் பிரிந்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரின் மரணத்திற்கும் ஒரே காரணமான அந்த பாரை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள்.மேலும் அங்கே இருவரும் குடித்த மது பாட்டிலை சேகரித்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அதற்குள் உயிரிழந்த இருவரின் உடற்கூறாய்வு அறிக்கை இந்த வழக்கை வேறு கோணத்தில் திசை திருப்பியது. ஆம்...இறந்து போன இருவரின் உடலிலும் சயனைடு கலந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் குப்புசாமியும், விவேக்கும் சயனைடு கலந்த மதுவை குடித்ததால் தான் இறந்திருக்க வேண்டும் என போலீசார் உறுதி செய்திருக்கிறார்கள்.குவாட்டரில் எப்படி சயனைடு கலந்திருக்க முடியும்...?ஒருவேளை நடந்திருப்பது கொலை திட்டமா?அல்லது தற்கொலை திட்டமா? என்று போலீசார் விசாரணையில் இறங்கிய போது தான் விவேக்கின் குடும்ப பிரச்சனை வெளிவந்திருக்கிறது. விவேக் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.ஆனால் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் விவேக் இப்படி தற்கொலை செய்து கொள்ள குவாட்டரில் விஷம் கலந்து குடித்தாரா எனவும் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் போலீசார் பார் உரிமையாளர் பழனிவேல் உட்பட விற்பனையாளர்கள் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் மதுபான கடையின் மேற்பார்வையாளர் முருகன் மற்றும் விற்பனையாளர்கள் திருநாவுக்கரசு,சத்தியசீலன்,பாலு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.முழு விசாரணைக்கு பிறகே அனைத்து மர்மங்களும் விலகும்.


Next Story

மேலும் செய்திகள்