லெஜெண்ட்ரியாக கொள்ளையடித்த Couples.. ஏஜென்ட்டாக செயல்பட்ட கடவுள்.. இதுக்கு பேர் தான் Crime Partner போல.. ரூ.10 ஜூஸால் Close-ஆன Case
பஞ்சாபில் நிதி மேலாண்மை நிறுவனத்தில் 8 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்ற கொள்ளைக்கார தம்பதியை ஸ்கெட்ச் போட்டு போலீசார் கைது செய்தனர். 8 கோடி பணத்தை கொள்ளையடித்தவர்கள் இலவச ஜூசுக்கு ஆசைப்பட்டு போலிசிடம் சிக்கிய சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள சி.எம்.எஸ் நிதி மேலாண்மை நிறுவனத்தில் கடந்த ஜூன் 10ம் தேதி, சினிமா படத்தை மிஞ்சும் அளவிற்கு ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல் காவலர்களை தாக்கி அவர்களிடமிருந்த துப்பாக்கியுடன் சென்று 8 கோடி ரூபாயை கொள்ளையடித்து தப்பி சென்றனர். தகவலறிந்து வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில் இந்த மொத்த கொள்ளையையும் வழிநடத்தியது ஒரு பெண் தான் என தெரியவந்துள்ளது. தீவிர விசாரணைக்கு பிறகு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரை முதலில் போலீசார் கைது செய்தனர்.
இதற்கு பின்னர் தான் அதிரடி விசாரணை தொடங்கியது. கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட மந்தீப் கவுரையும் அவரது கணவர் ஜஸ்விந்தர் சிங்கையும் வலைவீசித் தேடினர் போலீசார். இருவரும் நேபாளத்திற்கு தப்பி செல்வதை அறிந்த போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டதால், கொள்ளை தம்பதியின் தப்பிக்கும் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் கொள்ளை வெற்றிகரமாக நிறைவடைந்தததால் கடவுளுக்கு நன்றி தெரிவிக்க எண்ணிய அவர்கள், ஹேம்குந்த், பத்ரிநாத், கேதர்நாத்திற்கு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டனர். அங்கேயே மடக்கி பிடித்து கைது செய்ய தயாரான போலீசாருக்கு பக்தர்கள் கூட்டத்தில் அவர்களை தேடி பிடிப்பது சவாலாக அமைந்தது. அதற்கு ஏற்ப பக்காவான திட்டத்தையும் தீட்டினர். ஹேம்குந்தில் களைப்புடன் மலையேறி வரும் பக்தர்கள் ஜூஸ் அருந்த ஆர்வம் காட்டுவர் என கணித்த போலீசார், மலையேற வருபவர்களுக்கு இலவசமாக ஜூஸ் வழங்கினர்.
இலவச ஜூஸ் தங்களுக்கு விரித்த வலை தான் என அறியாத கொள்ளை தம்பதி வரிசையில் நின்று ஜூஸ் குடித்துள்ளனர் . கொள்ளையர்கள் கண்முன் இருந்தும் மௌனம் காத்த போலீசார், அவர்கள் கடவுளை வழிபட்டு வந்தவுடன் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் இவர்கள் கொள்ளையடித்த எட்டு கோடியில் 6 கோடி வரை மீட்ட போலீசார், கொள்ளை நடந்த 4 நாட்களில் 10 பேரையும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. சினிமா பட பாணியில் கொள்ளையடித்தவர்களை... அதே போல் சினிமா பட பாணியிலேயே திட்டமிட்டு கைது செய்த போலீசாரின் துரித நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.