பருத்தி பயிர் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு | TN Govt
நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தை 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்து வழங்கிடும் நோக்கத்துடன் பருத்திப் பயிரின் உற்பத்தியை தொடர்ந்து உயர்த்தும் வகையில் நிலையான பருத்தி இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பருத்தி சாகுபடி செய்யப்படும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், மதுரை, தேனி, சேலம், நாமக்கல், தஞ்சை, திண்டுக்கல், தூத்துக்குடி உட்பட 29 மாவட்டங்களில் செயல்படுத்திட 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பருத்தி இயக்கத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஜூலை முதல் அடுத்த வருடம் மார்ச் வரை உள்ள காலத்திற்குள் இதை செயல்படுத்த வேண்டும். உழவன் செயலில் முன்பதிவு செய்து அதன் அடிப்படையில் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிட, பழங்குடியின, சிறுகுறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் 2 ஹெக்டர் வரை பல்வேறு இனங்களில் மானியத்தை பெறலாம். திட்டத்தை செயல்படுத்தியதற்கான ஆவணங்களை உதவி மேலாண்மை அலுவலர், துறை மேலாண்மை அலுவலர்கள், வேளாண்மை அலுவலர்கள் ஆவணப்படுத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.