சர்ச்சை வீடியோ.. சிக்கிய கனல் கண்ணன்.. இந்து முன்னணியினரால் SP ஆபிஸில் பதற்றம் - ஸ்டண்ட் மாஸ்டருக்கு ஸ்டண்ட் காட்டிய போலீஸ்
திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை கன்னியாகுமரி மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் பிரபல ஸ்டன்ட் மாஸ்டராக அறியப்பட்டவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கனல் கண்ணன். முன்னணி கதாநாயகர்களுக்கு சண்டை பயிற்சியாளராகவும், சண்டையோடு கலந்த காமெடி காட்சிகளிலும் நடித்து பிரபலம் அடைந்தவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணியின் கலை இலக்கியப் பிரிவு மாநில தலைவராகவும் இருந்து வருகிறார்.
கடந்த 18ஆம் தேதி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் இளம் பெண்ணுடன் ஆடும் நடன காட்சிகளை பதிவிட்டு அவதூறான வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்பட்டது. இதற்கு சமூக வலைதளத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, ஐ.டி அணியின் மாவட்ட துணைத் தலைவர் ஆஸ்டின் பென்னட் என்பவர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை விசாரணை செய்த சைபர் க்ரைம் போலீசார் கடந்த 29ஆம் தேதி ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது மத உணர்வை புண்படுத்தும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் ஆஜரான கனல் கண்ணனிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டதால், அங்கு கூடியிருந்த இந்து முன்னணியினர் மாவட்ட எஸ்.பி அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அதிரடியாக அலுவலகத்தில் நுழைந்து கனல் கண்ணனை அழைத்துக் கொண்டு வெளியே புறப்பட தயாரானதால் எஸ்.பி அலுவலகத்தில் பதற்றம் நிலவியது.
பின்னர் காவல் துறையினர் அவர்களை வழிமறித்து கனல் கண்ணனை காவல் நிலையத்திற்குள் அழைத்துச் செல்ல முற்பட்டபோது, இந்து முன்னணியினருக்கும், காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் ஒரு வழியாக காவல் நிலையத்திற்குள் கனல் கண்ணன் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
கிட்டத்தட்ட 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் கனல் கண்ணனை கைது செய்வதாக மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்தனர். இதன் காரணமாக மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் ஏராளமான இந்து முன்னணியின் நிர்வாகிகள் கூடியதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இதன் பின்பு கைது செய்யப்பட்ட கனல் கண்ணனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நாகர்கோவில் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி உத்தரவிட்டதன் அடிப்படையில் நாகர்கோவில் மாவட்ட சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கனல் கண்ணன் தன்னை கைது செய்த நிகழ்வானது பழி வாங்கும் படலம் எனவும், விசாரணைக்கு ஆஜரான தனக்கு மதிய சாப்பாடு கூட வாங்கித் தராமல் மாலையில் கைது செய்ததாக தெரிவித்தார்.
கனல் கண்ணன், திரைப்பட சண்டை பயிற்சியாளர்
"பழிவாங்கும் படலம். ஆதாரங்கள் கொடுத்தும் ஏற்கவில்லை"
"சாப்பாடு கொடுக்காமல் வைத்திருந்து, கைது செய்வதாக கூறினர்"
"இது திட்டமிட்டது. இருந்தாலும் என் பணி தொடரும்"
கடன் ஆண்டு சென்னை மதுரவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியாரைப் பற்றி அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.