எம்.பி ஆ.ராசா குறித்து சர்ச்சை பேச்சு - "ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்" கைதுசெய்யப்பட்ட பாஜக நிர்வாகி
திமுக எம்.பி ஆ.ராசா குறித்து அவதூறு பேசியதாக கைது செய்யப்பட்ட கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
கோவை பீளமேடு பகுதியில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா குறித்து பாஜக நிர்வாகி பாலாஜி உத்தமராமசாமி அவதூறு பேசியதாக தெரிகிறது. இது குறித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகியை பீளமேடு போலீசார் கைது செய்தனர். பாலாஜி உத்தமராமசாமி மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, கோவை சுங்கம் சிவராம் நகரில் அமைந்துள்ள நீதிபதி இல்லத்தில் பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி செந்தில்ராஜா, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, பாலாஜி உத்தமராமசாமி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது பேசிய பாலாஜி உத்தமராமசாமி, தனது கருத்தில் இருந்து எள்ளளவும் பின்வாங்க மாட்டேன் என்றும் மாநில அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.