சென்னை சாலையில் திருநங்கையை வைத்து டிராபிக் SI செய்த சர்ச்சை செயல் - தீயாய் பரவும் வீடியோ..!
சாலை விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க, திருநங்கையை வைத்து சாலையிலேயே பூசணிக்காயை உடைக்க வைத்த போக்குவரத்து உதவி ஆய்வாளரின் செயல் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
சென்னை கோயம்பேடு அடுத்த மதுரவாயல், வானகரம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் வித்தியாசமாக யோசித்த மதுரவாயல் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் பழனி, போலீஸ் வாகனத்தில் திருநங்கை ஒருவரை ஏற்றிக்கொண்டு, அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியான வானகரத்தில் உள்ள சாலையில், பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம்பழம் சுற்றி திருஷ்டி சுற்றி போட வைத்தார். விபத்துகளை தவிர்க்க பூசணிக்காயை சாலையில் உடைப்பதை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஏற்கனவே அறிவுறுத்தி இருந்த நிலையில், அதே சாலையில் பூசணிக்காயை உடைக்க வைத்த போக்குவரத்து போலீசாரின் செயல் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.