சப்ஸ்கிரைபர்களுக்கு பட்டை நாமம் போட்ட கோவை யூடியூபர் 'மாடர்ன் மாமி' சிக்கினார்..
கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஹேமா என்கிற ஹேமலதா. இந்த தம்பதி கடந்த 2020-ம் ஆண்டு
'Modern Mammi' என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ளனர். அந்த யூடியூப் சேனலில், கோவையில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதை பதிவு செய்து வந்ததாக தெரிகிறது இதன் மூலம் இவர்கள் நடத்தும், யூடியூப் சேனலில் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்துக்கும் மேல் அதிகரித்தது.
இந்த நிலையில், தம்பதியினர் தங்களது யூடியூப் சேனலில் ஆயிரத்து 200 ரூபாய் முதலீடு செய்தால், 20 நாட்களில் மூலதன தொகையுடன் 300 ரூபாய் சேர்த்து ஆயிரத்து 500 ரூபாயாக திருப்பி தரப்படும் என விளம்பரம் செய்துள்ளனர். இந்த அறிவிப்பை நம்பிய பலர், தம்பதி கூறிய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி உள்ளனர். ஆனால், அறிவித்தப்படி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. முதலீடு செய்தவர்கள், தம்பதியை செல்போனில் தொடர்புகொண்டபோது, இருவரின் செல்போன்களும் ஸ்விட்ச் ஆப்பில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில்தான், தம்பதியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் ஒருவரான கோவை பன்னிமடை பாரதி நகரைச் சேர்ந்த ரமா என்பவர், இதுதொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், 44 பேரிடம் 41 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயை, ரமேஷ் - ஹேமா தம்பதி மோசடி செய்திருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, தலைமறைவான தம்பதியை போலீசார் தீவிரமாக தேடி வந்தபோது, கோவை விளாங்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த ரமேஷ் - ஹேமா தம்பதியையும், அவர்களுக்கு உதவி புரிந்ததாக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவரையும் கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட தம்பதியினர் இருவரும் ஒன்றரை கோடி வரை மோசடி செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். கைதான ரமேஷ் - ஹேமா தம்பதியிடம் இருந்து 45 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள், இருசக்கர வாகனம், 7 செல்போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.