கோவை கார் வெடி விபத்து - வெளியானது நீதிமன்ற உத்தரவு நகல்
கோவை உக்கடம் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இதுவரை
6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், முதலில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்தார். விசாரணை முடிந்து 5 பேரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த உத்தரவு நகல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த உத்தரவு நகலில், காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதில் கோவில் அருகே வசித்த அப்துல் மஜித் என்பவர் வீட்டில், ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜமீஷா முபின் வாடகைக்கு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கார் வெடிப்பு சம்பவம் குறித்து, கைது செய்யப்பட்ட பெரோஸ், முகமது ரியாஸ் ஆகியோர், காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததாக நீதிபதியிடம் குறிப்பிட்டுள்ளனர்.
அதுகுறித்து அவர்களை விசாரிக்க வேண்டி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இரண்டாவது குற்றவாளி அசாரூதீன், இறந்த ஜமீஷா முபீனின் உறவினர் என்பது அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.