சித்திரை நட்சத்திரக்காரர்களின் பரிகாரத்தலம்...குரு பகவான் நேரில் வந்து தவம் செய்த இடம் - மதுரை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலின் சிறப்புகள்

x

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த பரிகாரத்தலமான மதுரை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலின் சிறப்புகளை இன்றைய தினம் ஒரு தரிசனம் பகுதியில் பார்க்கலாம்...

தைரியசாலிகள்... பெற்றோர் மீது தீரா அன்பு கொண்டவர்கள் தான் இந்த சித்திரை நட்சத்திரக்காரர்கள்...

தாயின் வார்த்தைகளை வேத வாக்காக நம்பும் இவர்களுக்குகந்த தலம் மதுரை குருவித்துறையில் அமைந்துள்ள குரு பகவானின் சிறப்பு பெற்ற சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோயில் தான்...

வியாழனாகிய குருவே நேரில் வந்து தவம் செய்த தலம்... வியாழன் பார்க்க விரைந்திடும் திருமணம்... புண்ணிய குரு பார்க்க புத்திர பாக்கியம் கிட்டும்...

முன்பொரு காலத்தில் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் பயங்கரமான போர் மூண்டது... மாண்ட அசுரர்களை உயிர்ப்பித்தார் அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார்... இதைக் கண்டு அதிசயித்த தேவர்கள், வியாழன் அதாவது குருவின் மகனான கசனை அழைத்து, "எப்படியாவது நீ தான் சுக்கிராச்சாரியாரிடம் சென்று அந்த உயிர்ப்பிக்கும் மருதசஞ்சீவினி மந்திரத்தைக் கற்று வர வேண்டும்" என கூற... கசனும் "நான் திரும்பி வருகையில் பிரம்மச்சாரியாகத் தான் வருவேன்" என தந்தையிடம் உறுதி அளித்து விட்டு புறப்பட்டான்...

அசுரலோகம் சென்று அங்கு சுக்கிராச்சாரியாரின் மகள் தேவயானியிடம் காதல் செய்வது போல் நடித்து அவரிடம் இருந்து மருதசஞ்சீவினி மந்திரத்தையும் கற்றுக் கொண்டான்...

இதைக் கண்டு அதிர்ந்த அசுரர்கள், கசன் உயிரோடு இருந்தால் ஆபத்து என எண்ணி, அவனைக் கொலை செய்து தீயிட்டு சாம்பலாக்கி, அதைக் கரைத்து சுக்கிராச்சாரியார் குடிக்கும் பானத்தில் கலந்து கொடுத்து விட்டனர்...

அதையறியாது அசுரகுருவும் குடித்து விட்டார்... காதலனைக் காணாமல் துடித்தாள் தேவயானி... உண்மையை அறிந்து கொண்ட அசுரகுரு, மருதசஞ்சீவினி மந்திரத்தை உபயோகித்து கசனை உயிர்ப்பித்தார்...

உயிர்த்தெழுந்து வந்த கசனுக்கு காத்திருந்தது அதிர்ச்சி... ஏனெனில், சுக்கிராச்சாரியார் உயிரிழந்து கிடந்தார்...

உடனே கசன் தான் கற்ற மருதசஞ்சீவினி மந்திரத்தின் மூலம் தனது குருவை உயிர்ப்பிக்க, கசன் கிளம்ப முற்பட்டான்...

தேவயானி நிலை குறித்து அசுர குரு கேட்ட போது, தான் தன் தந்தைக்கு செய்து தந்த சத்தியத்தைக் கூறியதுடன், தற்போது அசுரகுருவின் வயிற்றில் இருந்து தான் வந்துள்ளதால் தேவயானிக்கு சகோதரன் முறை என சொல்லி தப்ப நினைத்தான்...

தேவயானியோ ஆத்திரம் கொண்டு, எல்லா தெய்வங்களையும் பிரார்த்தித்து சப்த மலைகளால் கசனை தேவலோகம் செல்ல விடாமல் தடுத்தாள்...

மகனைக் காணாமல் துடிதுடித்துப் போனார் குருபகவான்...

தன் மகன் கசனுக்காக வைகை நதிக்கரையில் துறை அமைத்து தவமிருந்தார் குரு... மனங்குளிர்ந்த நாராயணன் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தேரில் காட்சி தந்து கசனை மீட்டுத் தந்துள்ளார்... அதனால் தான் இத்தல இறைவன் சித்திர வல்லப பெருமாள் என அழைக்கப்படுகிறார்... தாயார் பெயர் செண்பக வல்லி...

குரு பகவான் துறை அமைத்து தவமிருந்த இடம் என்பதால் இது குருவின் துறை என்றழைக்கப்பட்டு பிறகு குருவித்துறை ஆனது...

இத்தலத்தில் சக்கரத்தாழ்வாரும், குரு பகவானும் சுயம்பு மூர்த்திகளாக அருள்பாலிக்கின்றனர்...

இங்கு பெருமாள் தாயாருடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்...

கோயிலானது காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 வரையிலும், மாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் திறந்திருக்கும்...

மதுரையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த தலம்..

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார தலம் எதுவென நாளைய தினம் ஒரு தரிசனம் பகுதியில் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்