தைவானை கைப்பற்ற திட்டமிடும் சீனா - இந்தியாவுக்கு சிக்கல்?
பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை, சீனா, 7.2 சதவீதம் அதிகரித்துள்ளது.ராணுவ செலவுகளுக்கு, 2023க்கான ஒதுக்கீட்டை 7.2 சதவீதம் அதிகரித்து 1.55 லட்சம் கோடி யுவான்களாக, சீன அரசு அதிகரித்துள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 18.38 லட்சம் கோடி ரூபாயாகும். இந்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையைப் போல இது மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அமெரிக்க ராணுவ பட்ஜெட் அளவில் இது மூன்றில் ஒரு பங்கு தான். சீனாவின் ராணுவ பட்ஜெட், 2021இல் 6.8 சதவீதமும், 2022இல் 7.1 சதவீதமும் அதிகரிக்கப்பட்டது. 2027இல் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. 2035க்குள் சீன ராணுவத்தை முற்றிலும் நவீனப்படுத்தும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தைவானைக் கைபற்றி, சீனாவுடன் அதை இணைக்கப் போவதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் பலமுறை கூறியிருந்த நிலையில், ராணுவ செலவுகள் மற்றும் நவீனமயமாக்கும் போக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.