முதியவர்களால் நிரம்பி வழியும் சீனா- மக்கள்தொகை குறைவது பிரச்னை
உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டியுள்ள நிலையில், சீனாவுக்கு புதிய பிரச்னை உருவெடுத்துள்ளது.
உலகத்திலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனா இருந்துவருவது, தெரிந்ததே! ஆனால் அடுத்த ஆண்டு சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முதலிடத்துக்கு வந்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.
பல துறைகளைப் போல இதிலும் சீனாவுக்குப் போட்டியாக இந்தியா வந்துவிட்டது ஒருபுறம் இருக்க... சீனாவில் மக்கள்தொகைக் குறைந்துகொண்டே போவது அங்கு புது பிரச்னையாக உருவாகியுள்ளது.
கடந்த ஆண்டில் சீனாவில் குழந்தைப்பேறு 1.16 ஆகப் பதிவாகியுள்ளது. இது, உலக அளவில் குறைந்தபட்ச மக்கள்தொகையைப் பேணுவதற்கு 2.1 என்கிற அளவை விடக் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைப்பிறப்பு கடந்த ஆண்டு 1.06 கோடியாக இருந்தது, இந்த ஆண்டில் ஒரு கோடியாகக் குறைந்துள்ளது. ஏற்கெனவே 2020 ஆம் ஆண்டைவிட கடந்த ஆண்டில் 11.5 சதவீதம் குறைந்திருந்தது.
இந்த சூழலில், சீனாவில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அங்கு புதிய பிரச்னையாக எழுந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது முக்கியமான பிரச்னை என்கிறார், ஹாங்காங் சீனப் பல்கலைக்கழகப் பேராசிரியர், ஷென் ஜியான்ஃபா.
சீனாவில் 65 வயதுக்கு மேற்பட்டோரின் அதிகரிப்புவீதம் 13 சதவீதம் கூடியநிலையில், வேலைகளைச் செய்யக்கூடிய இளைய, நடுத்தர வயதினரின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை.
1980ஆம் ஆண்டு முதல் 2015வரை, குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்பதை அரசு விதியாக வைத்திருந்தது. அதற்கு மாறாக இப்போது மூன்று குழந்தைகள்வரை பெற்றுக்கொள்ள லாம் என அரசு வலியுறுத்தினாலும், அதைப் பின்பற்றுவதில் மக்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை.
குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. தவிர ஒருவர் திருமணம் செய்துகொண்டால், அரசு அதிகாரிகள் தொடர்ந்து அவர்களை கண்காணித்து குழந்தை பெற்றுக்கொளவதை ஊக்குவித்து வருகிறது. ஆனால் அரசின் நடவடிக்கைகள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை...
வேலைவாய்ப்பு, உரிய ஊதியம், கல்விச்செலவு ஆகியவற்றால், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள, இளைய பெற்றோர்கள் விரும்புவதில்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது.