டைமிங்கில் அடித்த முதல்வர் ஸ்டாலின்.. அமித்ஷாவே எதிர்பாராத அதிரடி மூவ்கள் - பனிப்போர்கள் ஒரு பார்வை
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதல் கன்னித்தீவு கதை போல நாளுக்கு நாள் நீண்டு கொண்டே இருக்கிறது. 2021ம் ஆண்டு தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதல், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற ஒன்றரை ஆண்டு காலத்திலேயே, ஆளுநரை மாற்ற வேண்டும் என திமுக அரசு பலமுறை முறையிட்டிருப்பது இந்த மோதலின் உச்சத்தை விவரிக்கிறது. நீட் விலக்கு மசோதா இழுபறி விவகாரத்தில், தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பகிரங்கமாக பனிப்போர் தொடங்கியது. அதன் பின், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தாமதமான ஒப்புதல் அளித்த விவகாரம், எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல தமிழக அரசியல் வட்டாரத்தை கொதிக்க செய்தது.அடுத்தடுத்து வலுத்த பனிப்போரில், வார்த்தைப்போரும் மூண்டது. சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பது, சட்ட மசோதாக்களை நிறுத்திவைப்பது, என தமிழக அரசை வம்புக்கு இழுப்பது ஆளுநருக்கு வாடிக்கையாகி விட்டது.
பல விவகாரங்களில் மாநில அரசின் நிலைப்பாட்டை பொருட்படுத்தாமல் ஆளுநர் தரப்பு தனியொரு நிலைப்பாட்டை முன்னிறுத்தி வந்தது, தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியாக இருந்தது. தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்ற பெயரே சரியாக இருக்கும் எனக்கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.நாளுக்கு நாள் நீண்டு கொண்டே இருந்த இந்த பிரச்சனை, சட்டப்பேரவையில் பூதாகரமாக வெடித்தது. சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் தனது உரையில் இருந்த, "திராவிட மாடல், காமராஜர், பெரியார், பெண்ணுரிமை, சமூக நீதி" போன்ற வார்த்தைகளை பேசாமல் தவிர்த்ததில் இருந்து, இருதரப்பு மோதல் உச்சகட்டத்தை எட்டியது.இதற்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக உத்தரவிட்டு அதனை திரும்ப பெற்றார் ஆளுநர். அமைச்சர்கள் நியமனம், இலாகா விவகாரத்தில் முதலமைச்சருக்கே முழு பொறுப்பு இருக்கும் நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் என முதலமைச்சர் அறிவித்ததன் பின் இவ்விவகாரம் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கில் விசாரணை தொடங்க அனுமதி வேண்டி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இருப்பினும் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் ஊழல் வழக்கில், விசாரணை தொடர்பான கோப்புகளை இன்னும் பெறவில்லை என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கோப்புகளை ஆளுநர் அலுவலகம் பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டு ஆதாரத்தை அமைச்சர் ரகுபதி வெளியிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
அடுத்தடுத்த சர்ச்சைகளால் டென்சனான ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லிக்கு பறந்தார். ஆளுநர் டெல்லிக்கு சென்றிருந்த இந்த சமயத்தில், ஆளுநரை குறித்து 19 பக்க புகார் கடிதம் எழுதி, நேரடியாக குடியரசு தலைவருக்கே அனுப்பியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அக்கடிதத்தில், தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டு, அரசும், சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தனது செயல்பாடுகள் மூலம் "ஆளுநர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை அவர் நிரூபித்துள்ளதாகவும்" குறிப்பிட்டுள்ளார்.தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதியும், தமிழ்நாடு அரசின் நலன் கருதியும் குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.