"அவங்கள சும்மா விட்ராதிங்க பாய்" மனைவி,குழந்தைகளுடன் மருந்து குடிச்சிட்டு மரத்தில் தொங்கிய தந்தை - வெளியான அதிர்ச்சி ஆடியோ
சிதம்பரத்தில் உரக்கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் அருகே உள்ள வாண்டையாம்பல்லம் கிராமத்தை சேர்ந்த உரக்கடைகாரர் கணேஷ். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கணேஷின் உரக்கடை வியாபாரத்தில் அதிகளவு நஷ்டம் ஏற்பட்டதால், உரம் கொடுத்த நிறுவனத்தில் இருந்து நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கணேஷ், தன்னிடம் இருந்து பணம் பெற்றவர்களிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அவர்களும் முறையாக பதிலளிக்காததால் செய்வதறியாது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில், மனைவி மற்றும் பிள்ளைகள் உயிருக்கு போராடுவதை பார்த்து மணம் கொள்ளாமல் உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். உடனே அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நால்வரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், தனது சொந்த ஊரான அன்னப்பன்பேட்டை கிராமத்திற்கு சென்றிருந்த கணேஷ், அங்கு மன உளைச்சலால் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தன் தற்கொலைக்கு காரணமான சிவாயம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் செங்குட்டுவன் உட்பட சில பேர் மீது கணேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தற்கொலைக்கு முன் தனது நண்பர் அக்பர் அலிக்கு கணேஷ் அனுப்பிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.