வெல்டிங் மிஷின்.. காஸ்ட்லி கார்.. பக்கா ஸ்கெட்ச்.. பறந்த ரூ.5 கோடி நகை - பரபரப்பு CCTV காட்சிகள்

x

சம்பவம் நடப்பதற்கு முன்பு, அன்று இரவு, நகைக்கடையில் வியாபாரம் முடிந்து, கடையை பூட்டிவிட்டு, ஊழியர் வழக்கம்போல் சாவியை ஸ்ரீதரிடம் கொடுத்துள்ளார். காலை 9 மணியளவில், ஸ்ரீதர் கடையை திறப்பதற்காக சென்ற போது, கடையின் முன்பக்க ஷட்டர், வெல்டிங் மிஷினால் வெட்டப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கர் கதவை மிஷினால் கட் செய்து, அதிலிருந்த 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது பெரும் அதிர்வை, அவருக்கு ஏற்படுத்தியது.

மேலும் சில நகைகள் கீழே சிதறி இருந்த நிலையில், கொள்ளையர்கள் யார் எனக் கண்டறிய, சிசிடிவி கணினி இருக்கும் பக்கம் சென்றுள்ளார் ஸ்ரீதர்.

அப்போது, சிசிடிவி வயரை அறுத்துவிட்டு, ஹார்டிஸ்கையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றது, அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இதனால் அதிர்ந்து போன ஸ்ரீதர், கொள்ளை சம்பவம் குறித்து திருவிக நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார்.

பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் பகுதியான பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில், இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யபாரதி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் உள்ளிட்டோர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டன.

மேலும் சம்பவ இடத்திற்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதன் முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவு இரண்டு மணிக்கு இன்னோவா காரில் வந்த கும்பல் ஒன்று, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பிச் சென்றது கண்டறியப்பட்டது.

போலீசார் ரோந்து பணியில் வராத நேரத்தைக் கணித்து, கொள்ளையர்கள் இந்தக் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.

கொள்ளையர்களின் இந்த துணிகர செயலால், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மற்ற கடை வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்