"ஜன. 1 முதல்.. சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குக" - தமிழக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
மத்திய அரசால் ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு சேமிக்க இருப்பதால், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, பெட்ரோல், டீசல் மானியத்தை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு டிசம்பர் வரை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 கிலோ அரிசியும், அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படும் என்ற மத்திய அரசு அண்மையில் அறிவித்தது என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்பால், தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் வரை சேமிக்கவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், வரும் ஜனவரி முதல், பெட்ரோலுக்கு 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும், வீட்டு உபயோக சிலிண்டருக்கு 100 ரூபாயும் மானியம் வழங்கி, தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Next Story