தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
குற்ற வழக்குகளில் கண்காணிப்புக் கேமரா பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பாக நடைமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
அந்த மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் திரிக்கப்பட்டிருக்கலாம் என்று யுவராஜ் தரப்பு வாதிட்டது. அதற்கு, மின்னணு ஆதாரங்களை திரிக்க வாய்ப்பில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தடயவியல் துறை நிபுணர்களிடம் நீதிபதிகள் கேட்டு தெரிந்து கொண்டனர்.
இதையடுத்து, மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.