நண்பரின் துக்க நிகழ்விற்கு வந்த போது விபரீதம் - சுருண்டு விழுந்து இளம் மருத்துவர் உயிரிழப்பு
சென்னையில் நண்பரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த 25 வயதே ஆன இளம் மருத்துவர், திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் 25 வயதே ஆன இளம் மருத்துவர் பாலாஜி நாராயணன்...
ரஷ்யா சென்று மருத்துவம் படித்த பாலாஜி, தற்போது கோவாவில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்... இவரது நண்பர் திலீப் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது 30ம் நாள் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்...
நேற்று காலை பல்லாவரத்தில் உள்ள நண்பரின் துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலை தனது காரில் புறப்படுவதற்காக தயாரான போது, பாலாஜி திடீரென மயக்கம் அடைந்து தரையில் சரிந்தார்...
பதறிப் போன உறவினர்கள் அரக்கப் பறக்க பாலாஜியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், இளம் மருத்துவர் பாலாஜி நாராயணனன் கடும் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்...
சமீப நாட்களாக இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழக்கும் செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், இளம் மருத்துவரே மாரடைப்பிற்கு பலியான சம்பவம் அச்சத்தைக் கிளப்பியுள்ளது...