இந்தியாவை துரத்தும் 'சீட்டா' சாபம்.. செத்து விழும் சீட்டாக்கள்.. என்ன காரணம்? - உச்சகட்ட கவலையில் மத்திய அரசு
ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட சீட்டாக்கள் உயிரிழப்பதற்கான காரணங்கள் என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு
இந்தியாவில் 70 வருடங்களுக்கு முன்பு அழிந்துபோன இனமான சீட்டா என அழைக்கப்படும் சிவிங்கி புலிகளை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்தது.
அதன்படி ஆப்பிரிக்கவில் நமீபியா, தென் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட 20 சீட்டாக்கள் மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன. இவைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பெண் சீட்டா சாஷா மார்ச் 27 ஆம் தேதி உயிரிழந்தது. சிறுநீரக கோளாறு காரணமாக சாஷா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதேவேளையில் நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஜுவாலா என்ற பெண் சீட்டா 4 குட்டிகளை ஈன்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் உதய் என்ற ஆண் சீட்டா ஏப்ரல் 24 ஆம் தேதி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சிறுத்தைக்கு இதய கோளாறு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோல் மே 9 ஆம் தேதி இனப்பெருக்கத்திற்காக திறந்துவிடப்பட்ட தக்ஷா என்ற பெண் சீட்டா ஆண் சிறுத்தை புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்தது.
இதன் தொடர்ச்சியாக ஜுவாலா சீட்டாவிற்கு பிறந்த குட்டிகளில் ஒன்று மே 23 ஆம் தேதி உயிரிழந்தது கவலையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மீண்டும் 2 குட்டிகள் உயிரிழந்து இருப்பதாக குனோ தேசிய பூங்கா தெரிவித்துள்ளது.
இந்த குட்டிகள் உயிரிழப்புக்கு வெப்ப அலையும் காரணமாக இருக்கிறது. இந்தியாவில் பிறந்த அனைத்து குட்டிகளும் பலவீனமாகவும், எடை குறைவாகவும், நீர்சத்து குறைபாடுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாயன்று குனோ தேசிய பூங்கா பகுதியில் வெப்பநிலை கிட்டத்தட்ட 47 டிகிரி செல்சியசாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் ஒரு குட்டியும் பலவீனமாகவே இருப்பதாகவும், அதனை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சீட்டாக்கள் உயிரிழப்பு தொடர்பாக கவலை தெரிவித்திருந்த உச்சநீதிமன்றம், சீட்டாக்களை இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டிருந்தது.
குனோ தேசியப் பூங்கா பல சீட்டாக்களுக்கு இடமளிக்க போதுமானதாக இருக்காது என குறிப்பிட்ட நீதிமன்றம், குனோவை விட பொருத்தமான வாழ்விடத்தை ஏன் ஆராயக்கூடாது? என்ற கேள்வியையும் மத்திய அரசுக்கு எழுப்பியிருந்தது.
சீட்டாக்கள் உயிரிழப்புக்கு மத்தியில் சீட்டாக்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டத்தை மேற்பார்வையிட தேசிய மற்றும் சர்வதேச வல்லுநர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்திருக்கிறது. விரிவான ஆய்வை மேற்கொள்ளும் குழு, பூங்கா நிர்வாகத்திற்கு போதிய வழிகாட்டலை வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.