சவுக்கு சங்கர் வழக்கு-"நீதிபதிகள் பழிவாங்கும் உணர்ச்சிக்கு ஆளாக கூடாது"-திருமாவளவன் விமர்சனம்
அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்ய நீதிபதிகள் முன்வர வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சவுக்கு சங்கர், வழக்கில் பாதிக்கப்பட்டவராகக் கூறப்படும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களே மனுவை விசாரித்து தண்டனையும் அளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
விமர்சனங்களுக்கு நீதிமன்றங்களும் நீதிபதிகளும் அப்பாற்பட்டவர்களா எனக் கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன், கருத்துச் சொன்னாலே நீதிமன்ற அவமதிப்பு என்னும் பெயரில் சட்டம் பாயுமென நீதிபதிகள் வரிந்து கட்டுவதாக விமர்சித்துள்ளார்.
பழிவாங்கும் உணர்ச்சியின்றி நீதிபதிகள் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சவுக்கு சங்கரை விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள திருமாவளவன், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை நீக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.