ஸ்ரீமதி பெற்றோர் மீது சிபிசிஐடி அடுக்கடுக்கான புகார்...! விடுதியில் செல்போன் பயன்படுத்தினாரா?

x

கடந்த ஜூலை 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் வன்முறையில் வெடித்து அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது. மகளின் மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை என போராட்டத்தில் குதித்த பெற்றோரை அப்போதே நீதிமன்றம் கண்டித்தது..

மகளின் உடலை வைத்துக் கொண்டு பந்தயம் கட்டுகிறீர்களா? என நீதிமன்றம் அப்போது கேள்வி எழுப்பியது. இதனிடையே மாணவி மரண வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கானது நீதிபதி சிவஞானம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் புலன் விசாரணைக்கு மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுப்பதாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் குற்றச்சாட்டு முன்வைத்தார். மேலும் விடுதியில் மாணவி பயன்படுத்திய செல்போனை வழங்க மறுப்பதாகவும், மரபணு சோதனைக்கு ஸ்ரீமதியின் பெற்றோர் மாதிரிகளை வழங்க மறுக்கிறார்கள் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதனை புலன்விசாரணைக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையின் நிலவரம் குறித்து அடுத்த அறிக்கையை வரும் அக்டோபர் 10ஆம் தேதி தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

மாணவி ஸ்ரீமதி மரணத்தில் பள்ளி நிர்வாகிகளின் ஜாமின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அப்போதும் ஸ்ரீமதியின் பெற்றோர் குறித்து பல கருத்துகளை முன்வைத்தது.

நன்றாக படிக்க சொல்வது ஆசிரியர் பணியின் ஒரு அங்கம் தான் என்றும், அது தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல என்றும்,

மகளின் மரணம் தொடர்பாக ஸ்ரீமதியின் பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்றும் நீதிமன்றம் அப்போதே தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்