4 இளம் ராணுவ வீரர்களின் உயிரை பறித்த தோட்டா.. காணாமல் போன ராணுவ துப்பாக்கி..திடீர் திருப்பம்.. பஞ்சாப் துப்பாக்கிச்சூடு - அதிர்ச்சி தகவல்
பஞ்சாப்பில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில், இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ள நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவத்தில் நடந்தது என்ன? இதற்கு பின்னால் இருப்பவர்கள் யார்? என்று அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.
இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய வெடிமருந்து கிடங்குகளுள் ஒன்று தான் இந்த பதிண்டா ராணுவ நிலையம்.
குடியிருப்பு பகுதிகளில் இருந்து விலகியிருக்கும் இந்த பகுதி, புதன் அன்று அதிகாலை பயங்கர துப்பாக்கி சத்தத்தால் அதிர்ந்தது.
இந்த அசம்பாவிதத்தில் காயமடைந்த 4 இந்திய வீரர்களும் உயிரிழந்தனர். இதற்கு பின்னணியில் தீவிரவாத தொடர்பு இருக்கிறதா? என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், இந்த அசம்பாவிதம் ஒரு பயங்கரவாத செயல் அல்ல என அறிவித்தது, பஞ்சாப் காவல்துறை.
அப்போ தாக்குதலில் ஈடுபட்டது யார்? இந்த சம்பவத்துக்கான காரணம் என்ன? நான்கு ராணுவ வீரர்களின் உயிர்களை பறித்தது யார்? போன்ற அடுத்தடுத்த கேள்விகளும் சந்தேகங்களும் எழத் தொடங்கின.
இதில் திருப்புமுனையாக இரண்டு நாட்களுக்கு முன்பு ராணுவ நிலையத்தில் இருந்து காணாமல் போன துப்பாக்கி, தாக்குதல் நடந்த அன்று மாலை கண்டுபிடிக்கப்பட்டது விசாரணையை வேறு கோணத்திற்கும் திருப்பியது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன இன்சாஸ் துப்பாக்கி மற்றும் 28 தோட்டாக்களில் தற்போது துப்பாக்கி மற்றும் 19 தோட்டாக்கள் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த 4 வீரர்களுமே 24 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். ராணுவ முகாம் அருகே தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கி சூடு நடத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
கண் இமைக்கு நேரத்திற்குள் முகமூடி அணிந்த நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்த பிறகு, அவருடன் இருந்த இன்னொருவர் கோடாரியுடனும் வனப்பகுதிக்குள் மாயமாகி இருக்கிறார்கள்.
இதில் கமலேஷ், கோகேஷ் குமார் ஆகிய இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள பெரிய வனவாசி பனங்காடு பகுதி ஆகும்,
இதேபோன்று, ராணுவ முகாமில் உயிரிழந்த யோகேஷ்குமார், தேனி மாவட்டம், தேவாரம் அடுத்த மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு உயிரிழந்த 4 வீரர்களின் உடல்களும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மர்மமான முறையில் 4 இளம் ராணுவ வீரர்கள் தோட்டாக்கள் பாய்ந்து உயிரிழந்திருக்கும் செய்தி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.