2 ரயில்கள் மோதி உயிர் தப்பிய அதிசய பெண்...வருடத்தின் கடைசி நாளில் ஓர் நற்செய்தி
பிரிட்டனில் தரைக்கடியில் செல்லும் டியூப் எனப்படும் ரயில் வண்டிகளில் அன்றாடம் லட்சக்கணக்கானவர்கள் வேலைக்குச் சென்றுவருகின்றனர். ஒரு மணி நேரத்துக்கும் மேல் பயணம் செய்யும் கணிசமான பயணிகள் நல்ல தூக்கம் போட்டு முடித்துவிடுவதும் உண்டு.
இப்படி, வடக்கு லண்டன், கேம்டன் பகுதியைச் சேர்ந்த 44 வயது சாரா தரையடி ரயிலில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தார். பயணத்தில் ஆழ்ந்து உறங்கிவிட்ட இவர், கேம்டன் ரயில் நிலையத்தில் இறங்காமல் விட்டுவிட்டார். ஹை பேனட் நிலையத்தில் இறங்கி, திரும்புதற்கான வண்டியைப் பிடிக்க அவசரமாக ஓடினார்.
அப்போது ஈரமான தரையில் கால்தவறி, நடைமேடைக்கும் ரயில்வண்டிக்கும் இடையில் விழுந்துவிட்டார். சுதாரித்து எழுந்திருப்பதற்குள், அவர் மீது அந்த ரயில் ஏறியது. அதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவர் மீது, அடுத்து வந்த ஒரு தொடர்வண்டியும் ஏறியது.
சாராவின் அபாயக் குரல் யாருக்கும் கேட்கவில்லை. பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, சில பயணிகள் அவரின் நிலையைப் பார்த்து, மீட்புப் படையினருக்குத் தெரிவித்தனர்.
ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் ஒயிட்சேப்பலில் உள்ள ராயல் லண்டன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஏராளமான ரத்தப்போக்குடன் படுகோரமாக உருக்குலைந்திருந்த, சாராவின் ஒரு கையும் காலும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.
மூன்று மாத சிகிச்சைக்குப் பின், கடந்த வெள்ளியன்று வீடு திரும்பினார், சாரா.
அரிதினும் அரிதாக, உயிர்தப்பிய சாரா சொல்வது...
" வாழ்க்கையில் சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் அதிகமாகக் கவலைப்படுபவர்கள், இப்படி உயிராபத்தான வேளைகளில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்" என்பதே!
ஆண்டின் இறுதியில், பொருத்தமான பொன்வாசகம் அல்லவா, இது!?