அடுத்தடுத்து இடிந்து விழுந்த பாலங்கள்... சுக்குநூறாக உடைந்த மக்களின் கனவு - குஜராத்தில் அரங்கேறும் பரிதாபங்கள்
குஜராத் மாநிலத்தில் திறப்பு விழாவுக்கு தயாராக இருந்த மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அங்கு பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
குஜராத் மாநிலத்தில் மோர்பி நகரில் ஓடும் ஆற்றின் மேல் கட்டப்பட்ட கேபிள் பால விபத்தை நாம் அவ்வளவு சீக்கீரம் மறந்துவிட முடியாது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட இந்த விபத்தில் பாலத்தை பார்வையிட வந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது....
அதேபோல குஜராத்தின் முக்கிய நகரமான ஆனந்த் பகுதியில் உள்ள தண்டி யாத்ரா மார்க் என்னும் இடத்தில், கட்டுமான பணி முடியும் நிலையில் இருந்த பாலம் ஒன்று சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது....
அடுத்தடுத்து இரண்டு பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளும் பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையாய் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த பரப்பரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு புதிய பாலம் இடிந்து விழுந்த சம்பவம் குஜராத் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தபி மாவட்டம், வலோட் தாலுகாவில் மேபூர் மற்றும் தெஹ்காமா என்ற இரண்டு கிராம மக்கள் பயனடையும் வகையில் மின்டோலா ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட முடிவு செய்து கட்டுமான பணிகள் நடந்துவந்தன.
வேகமாக நடந்த வந்த பால பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க தயாராக இருந்தது. நீண்ட கால போராட்டத்திற்கு தீர்வு கிடைத்ததாக எண்ணி மக்கள் மகிழ்ச்சியில் திழைத்திருக்க அவர்கள் தலையில் பேரிடியாக இறங்கியது அந்த செய்தி.
ஆற்றின் மீது கம்பீரமாய் காட்சியளித்த அந்த பாலம் துண்டு துண்டாய் உடைந்து விழுந்த செய்திதான் அது. இடிந்து விழுந்தது பாலம் மட்டுமல்ல இரண்டு கிராம மக்களின் கனவுகளும் கூட.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிச்சென்றார்.
கனவு கலைந்த சோகம் ஒருபுறம் என்றால், நல்ல வேளை செயல்பாட்டுக்கு வரும்முன் இடிந்துவிட்டது என்று மகிழ்ச்சியும் கொள்கிறார்கள் மக்கள்.
ஒருவேளை பாலம் திறந்து மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது விழுந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்றும், முன்பே இடிந்துவிட்டதால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்படிருப்பதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர் மக்கள்.