"கோடிக்கணக்கில் புரண்ட லஞ்சம்" -முறைகேடாக சேர்ந்த 32 மாணவர்களுக்கு தடை - மீன்வளத்துறை ஆணையர் அதிரடி

x

நாகையில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகத்தில், மாணவர் சேர்க்கையில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. தகுதியற்றவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக தேர்வு கட்டுப்பாட்டாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், 30 மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் இருவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின் போது நாகையில் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ், தலைஞாயிறில் செயல்படும் டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், 4 ஆண்டு இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்புக்கு, கடந்த 2021-2022 மற்றும் 2022-2023 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து மாணவர் அளித்த புகாரின்பேரில் தமிழ்நாடு அரசும், பல்கலைக்கழகமும் விசாரணைக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர். இதில், 2022-23ஆம் கல்வியாண்டில், காத்திருப்போர் பட்டியலில் உள்ள பல மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. தகுதியில்லாதவர்களுக்கு சேர்க்கை வழங்கியதால் பெரும் ஊழல் நடந்துள்ளதும், கட்-ஆஃப் மதிப்பெண்களுக்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. தகுதியற்றவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜவகர், 32 மாணவர்களை முறைகேடாக சேர்த்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஜவகர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் லஞ்சம் பெற அவருக்கு யார்? யார் துணையாக நின்றார்கள் என்பது குறித்து, தமிழக மீன்வளத்துறை ஆணையர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகையை சேர்ந்த 32 மாணவ-மாணவியர் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவர்களது கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், கமிட்டியின் அறிக்கைக்குப்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதனிடையே, மாணவர் சேர்க்கை முறைகேடு விவகாரத்தில் 30 மாணவர்களும், பல்கலைக்கழக ஊழியர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த தொடர்பாக விசாரிக்க பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் மற்றொரு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்