“தக்காளிய தொட்ட நீ கெட்ட“ - தக்காளியை பாதுகாக்க பவுன்சர்கள் - அலும்பு பண்ணும் வியாபாரி

x

கூலிங் கிளாஸ் அணிந்து நாளா பக்கமும் துறுதுறுவென பார்த்துக் கொண்டு, கடைக்கு அருகில் வருபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் இந்த பவுன்சர்கள், பிரபலங்களை பாதுகாக்கவோ, அரசியல்வாதிகளை பாதுகாக்கவோ நியமிக்கப்பட்டவர்கள் இல்லை..நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக விலை உயர்ந்து கொண்டிருக்கும் தக்காளியை பாதுகாக்கவே, இந்த இரண்டு பவுன்சர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தக்காளி பிரதானமாக விளையக்கூடிய மாநிலங்களான கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. விளைவித்த தக்காளியை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் அந்ததந்த மாநிலங்களில் தக்காளி தேங்கிய வண்ணம் இருக்கின்றது. போதுமான தக்காளியின் வரத்து இல்லாமல், 120 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தக்காளியை அன்றாட உணவு வகையில் சேர்த்து பயன்படுத்திய இந்தியர்கள், தற்போது தக்காளி இல்லாமல் தடுமாறி வருகின்றனர்.

கடந்த வாரத்தில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளியை களவாடிய சம்பவம் கர்நாடகத்தில் அரங்கேறியது. பெரிய உணவகங்களில் கூட தக்காளி பயன்படுத்த உரிமையாளர்கள் யோசித்து வரும் நிலையில் சாமானிய மக்கள் நிலையை சொல்வதற்கில்லை. தக்காளியை இனி உணவு வகையில் சேர்க்கலாமா, விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள் பட்டியலில் வைத்து தூரத்தில் நின்று ரசிக்கலாமா என யோசிக்கும் நிலையில்தான் அவர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடையில் உள்ள தக்காளிகளை பாதுகாக்க 2 பாதுகாவலர்களை நியமித்திருக்கிறார், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த, வியாபாரி அஜய். தக்காளியின் பாதுகாப்புக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதிபருக்கு பாதுகாப்பு கொடுப்பது போல எச்சரிக்கையாக இருக்கின்றனர். வியாபாரி அஜய் கூறும் போது, தக்காளி விலை உயர்ந்துவிட்டதால், கடைக்கு வருபவர்கள் தக்காளியை திருடும் சம்பவம் அதிகரித்து விட்டதாகவும், அதன் காரணமாகவே பலத்த பாதுகாப்புடன் தக்காளியை விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். தக்காளிக்கு பாதுகாவலர்கள் நியமிக்கும் நிலைக்கு நாட்டின் நிலைமை இருக்கிறது, கூடிய விரைவில் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்