கங்குலியை வைத்து பாஜக போடும் ஸ்கெட்ச்.. மம்தா எதிர்பார்க்காத அரசியல் யார்க்கர் - ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்

x

ஜூலை 24ம் தேதி 10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், குஜராத் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் . இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

கோவா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நிறைவடைவதால், 10 இடங்களுக்கும் ஜூலை 24ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கோவாவில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட, வினய் டி. டெண்டுல்கரின் பதவிக்காலமும் ஜூலை 28-ம் தேதியுடன் முடிவடைவதுடன் பாஜக சார்பில் மீண்டும் அவரே போட்டியிடுவாரா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

மேற்கு வங்கத்தில் 6 இடங்களுக்கும், குஜராத்தில் 3 இடங்களுக்கும், கோவாவில் ஒரு இடத்திற்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் அதிக எண்ணிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் , 5 எம்.பி. பதவிகளை அக்கட்சியே தக்க வைத்துக்கொள்ளும். மீதமுள்ள ஒரு பதவி பாஜக வசம் வரும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் போதே சவுரவ் கங்குலியை தன் பக்கம் இழுக்க..பாஜக பல முயற்சியை எடுத்து வந்தது. ஆனால் எதற்கும் பிடி கொடுக்காமல் நழுவி வந்தார் கங்குலி. இந்நிலையில், தற்போது ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு அவரை நிறுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

குஜராத்தில் 11 ராஜ்யசபா இடங்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜுகல்ஜி தாக்கூர் மற்றும் தினேஷ் அனவாடியா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைவதால், 3 ராஜ்யசபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

182 எம்.எல்.ஏ.க்களை கொண்ட குஜராத்தில் 17 எம்.எல்.ஏக் களை மட்டுமே காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளதால், போட்டியிட போவதில்லை என அறிவித்து விட்டது. மூன்று இடங்களிலும் பாஜக வெற்றி பெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

இந்நிலையில், பதவிக்காலம் நிறைவடையவுள்ளதால், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீண்டும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஜூலை 13ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் ஓரிரு தினங்களில் வேட்பு மனு தாக்கல் சூடுபிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்