"பாஜக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்ய தயாரா?" - அரசு கொறடா கேள்வியால் புதுவை சட்டசபையில் பரபரப்பு
புதுச்சேரியில் கூட்டணியில் இருந்து கொண்டே முதலமைச்சரை பதவி விலக வலியுறுத்தும் பாஜக எம்.எல்.ஏ.க்கள், பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா என அரசு கொறடா கேள்வி எழுப்பியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் புதுச்சேரியில், முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் குரலெழுப்பி வருகின்றனர். பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதால் தனது தொகுதியை மாநில அரசு புறக்கணிப்பதாக கூறி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்களான் சட்டமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல் பாஜக எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரம் உள்ளிட்டோரும் ரங்கசாமி மீது புகார் தெரிவித்தார். தொடர்ந்து பாஜக உறுப்பினர்கள் புகார் கூறி வருவதால், முதலமைச்சர் ரங்கசாமியுடன் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அப்பொழுது பேசிய அரசு கொறடாவும், சட்டமன்ற உறுப்பினருமான ஆறுமுகம், என்.ஆர். காங்கிரஸ் ஆதரவால் பாஜக உறுப்பினர்கள் வெற்றிப்பெற்றதாக கூறியதுடன், அவர்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் தேர்தலை சந்திக்க தயாரா என கேள்வி எழுப்பினார்.