பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக MLA... தட்டிக்கேட்ட எதிர்கட்சி MLA-க்கள் சஸ்பெண்ட் - சபாநாயகர் செயலால் அதிர்ச்சி
திரிபுரா சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ. ஆபாச படம் பார்த்த விவகாரத்தால் பேரவையில் பெரும் களேபரம் அரங்கேறியது.
திரிபுரா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது... அப்போது கடந்த மார்ச் மாதம் சட்டப் பேரவையில் ஆபாச படத்தை பார்த்து சர்ச்சையில் சிக்கியபாஜக எம்.எல்.ஏ. ஜாதாப் லால் நாத் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின.
பாஜக எம்.எல்.ஏ. ஜாதாப் லால் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் அனிமேஷ் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்க மறுத்த சபாநாயகர், மற்ற முக்கிய விஷயங்கள் குறித்து பேசுவோம் என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிபுரா மோர்ச்சா கட்சியை சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து 30 நிமிடங்களுக்கு மேலாக கோஷம் எழுப்பினர்.
பாஜக எம்.எல்.ஏ.க்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவையில் பரபரப்பு நிலவியது. அவைக்காவலர்கள் இருதரப்பையும் தடுத்து நிறுத்த போராடினர்.
ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவையின் மையப்பகுதியில் இருந்த மேஜை மீது ஏறி பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் காரணமாக திரிபுரா சட்டப்பேரவையில் பெரும் களேபரம் ஏற்பட்டது.
இதனையடுத்து முதல்வர் மாணிக் சாஹா கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். இதனையடுத்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்பு செய்தன.