அதிமுக கனவை கலைத்த பாஜக.. யோசிக்காமல் புலிகேசியில் புலியாய் பாய்ந்த ஈபிஎஸ் - தேர்தல் ஆணையம் கையில் முடிவு

x

கர்நாடக தேர்தல் களத்தில் தமிழர்கள் வாக்கை குறிவைத்து அதிமுக களமிறங்குவது வழக்கமான ஒன்று..

ஆனால் வெற்றி என்பதுதான் once upon a time என்றாகிவிட்டது.

ஆம், அதிமுக கர்நாடகாவில் வெற்றியை பதிவு செய்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

கடந்த 40 ஆண்டுகளில் தமிழர்கள் அதிகம் வாழும் கே.ஜி.எப். தொகுதியில் அதிமுக 1983, 1989, 1999 தேர்தல்களில் வென்றது.

இதேபோன்று தமிழர்கள் வெற்றியை தீர்மானிக்கும் காந்திநகர் தொகுதியில் 1994-ல் வெற்றிப்பெற்றது.

1999-க்கு பிறகு அக்கட்சியால் அங்கு போட்டியை சமாளிக்க முடியாது சோபிக்காமல் சென்றுவிட்டது.

கடைசி 2 தேர்தல்களை பார்த்தால், 2013-ல் தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார்.

காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட புகழேந்தி 3 ஆயிரத்து 197 வாக்குகளை பெற்றிருந்தார். ராஜாஜி நகரில் ஆயிரத்து 660 வாக்குகளையும், கோலார் ஜே.ஜி.எப். தொகுதியில் 2 ஆயிரத்து 52 வாக்குகளையும், நரசிம்ஹராஜா தொகுதியில் ஆயிரத்து ஒரு வாக்கையும், ஹனூர் தொகுதியில் 2 ஆயிரத்து 370 வாக்குகளையும் அதிகம் பெற்றிருந்தது. அதாவது 5 தொகுதிகளிலும் சேர்த்து 10 ஆயிரத்து 280 வாக்குகளை பெற்றது.

இதுவே கடந்த 2018 தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இரட்டை தலைமையில் களமிறங்கிய அதிமுக, காந்தி நகரில் 545 வாக்குகளையும், ஹனூரில் 503 வாக்குகளையும், கோலார் தங்க வயலில் ஆயிரத்து 24 வாக்குகளையும் வாங்கியிருந்தது. அதாவது மொத்தம் 2 ஆயிரத்து 72 வாக்குகளை பெற்றிருந்தது அதிமுக...

கர்நாடகாவில் 2018 தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை. அங்கீகரிக்கப்படாத மாநிலக் கட்சியான அதிமுக, தேர்தல் அறிவிப்பு வெளியான 3 நாட்களுக்குள் சின்னம் கோரி விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்த முறை இதனை அதிமுக செய்ய தவறியதால் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை.

இந்த சூழலில் கர்நாடகாவில் தேர்தல் நெருங்கியதுமே போட்டியிட அதிக ஆர்வம் காட்டியது அதிமுக. தமிழகத்தில் கூட்டணியில் இருக்கும் பாஜகவிடம் 3 தொகுதியை கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதிமுகவின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளியிட்ட பாஜக, தமிழர்கள் வாழும் பகுதியில் எல்லாம் வேட்பாளர்களை அறிவித்தது.

கர்நாடக தேர்தல் களத்தில் புலிகேசி தொகுதியில் அன்பரசன் போட்டியிடுவார் என அதிரடியாக அறிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு எதிராக வேட்பாளரை களமிறக்கியிருக்கிறது அதிமுக....

மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் அணியும் அதிரடியாக களத்தில் இறங்கியிருக்கிறது. இப்படியாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் மோதல் கர்நாடகாவிலும் காட்சியளிக்க, இரட்டை இலை சின்னம் தொடர்பான பஞ்சாயத்து அங்கும் வெடிக்குமா...? என்றெல்லாம் கேள்வி எழுகிறது.

ஆனால் இம்முறை நிலவரம் வேறு, ஈபிஎஸ் தரப்பை பொறுத்த வரையில் தங்களது தரப்பே உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. வேட்பாளரின் ஏ பார்ம், பி பார்ம் கையெழுத்திடும் அதிகாரத்தை பெற ஈ.பி.எஸ். முனைப்பு காட்டுவதாகவே தெரிகிறது. பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரி ஈபிஎஸ் தரப்பு நாடியதும், தேர்தல் ஆணையம் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்