அண்ணாமலைக்கு இன்று முதல் 'Z' பிரிவு பாதுகாப்பு

அண்ணாமலைக்கு இன்று முதல் Z பிரிவு பாதுகாப்பு
x

இந்தியாவில் முக்கியமான நபர்கள், தலைவர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்கள் ஆகியோருக்கு உள்துறை அமைச்சகத்தால் ஆறு வகையான பாதுகாப்பு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.



எஸ்.பி.ஜி, இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் ஆகிய 6 பாதுகாப்பு பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

எஸ் பி ஜி என்ற சிறப்பு பாதுகாப்பு பிரிவு, பிரதமருக்கு மட்டும் அளிக்கப்படுகிறது. கருப்பு நிற கோட்டுகள் அணிந்த கமாண்டோ வீரர்கள், பல கட்ட சோதனைகளுக்கு பிறகு இதற்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

இசட் பிளஸ் பாதுகாப்பு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முதலமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படுகிறது. இந்த பிரிவில் நபர் ஒருவருக்கு 55 கமாண்டோ படை வீரர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.

அமித் ஷா, ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத், அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, சந்திரபாபு நாயுடு, சரத் பவார், மாயவதி, உமா பாரதி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாதம் 33 லட்சம் ரூபாய் கட்டணத்தில் முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இசட் பாதுகாப்பு பிரிவில் 22 கமாண்டோ படையினர் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள். தமிழகத்தில் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் ஷகீல் அக்தர், அசுதோஸ் சுக்லா, விஜயகுமார் மற்றும் முன்னாள் தேசிய பாதுகாப்பு துறை செயலாளர் எம்.கே.நாராயணன் ஆகியோருக்கு இசட் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணா மலைக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

மத்திய உளவுத்துறை நிறுவனங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து ஒருவருக்கு இருப்பதாக அறிக்கை அளித்தால், அந்த நபருக்கு, 20 லட்சம் மாத கட்டணத்தில் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. கெளதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் அச்சுறுத்தல் இருக்கக்கூடியவர்களுக்கு ஒய், ஒய் பிளஸ், எக்ஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒய் பிளஸில் 11 பாதுகாப்பு படை வீரர்களும், ஒய் பிரிவில் 8 பாதுகாப்பு படை வீரர்களும், எக்ஸ் பிரிவில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்களும் சுழற்சி முறையில் பணியாற்று வார்கள்.

நடிகர் சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பும், நடிகர்கள் அக்‌ஷ்ய குமார் மற்றும் அனுபம் கெர் ஆகியோருக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒய், ஒய் பிளஸ், எக்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுகளில் சுமார் 80 பேருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் மொத்தம் சுமார் 800 பேருக்கு இசட் மற்றும் அதற்கு கீழ் உள்ள பிரிவுகளில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இன்று முதல் 'Z' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்ற பின் மாநில போலீசாரும் அதன் பின் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பாதுக்காப்பு அச்சுறுத்தல் காரணமாக Y பிரிவு பாதுகாப்பினை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியது

அதன் பின் மீண்டும் மத்திய உளவு பிரிவின் தகவலின் அடிப்படையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மேலும் கூடுதல் பாதுகாப்பு வழங்கும் வகையில் சில நாட்களுக்கு முன்பு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய முடிவு செய்தது.

அதன்படி, இன்று மதியத்தில் இருந்து சென்னை தி.நகர் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 'Z' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்