பவானிசாகர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடியாக உயர்வு | Erode | Bhavanisagar dam | Maayaru River
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 19894 கன அடியாக அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து 16891 கன அடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து 19894 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் நேற்று 90 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று 93 அடியாக உயர்ந்துள்ளதால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை வேகமாக நிரம்பி வருவதால் பாசனப் பகுதியான ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.