'பாகுபலி' பிரபாஸ்-க்கு அடி மேல் அடி.. முதல் நாளிலே ஷாக் கொடுத்த தமிழர்கள் - தியேட்டரில் அனுமன் சீட்டாவது ஆதிபுருஷ்ஷை காப்பாற்றுமா?

x

பிரபாஸ் ராமராக நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் வசூல் முதல் நாளிலேயே ரூ.100 கோடியை எட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதை பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு

பான் இந்தியா படங்களுக்கான பட்டியலில் முக்கிய இடம் பிடித்தது மட்டுமல்லாமல், தெலுங்கு ஹீரோ பிரபாஸ்-ஐ இந்திய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்தது பாகுபலி படங்கள்.

இந்தி பேசும் மாநிலங்களிலும் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள். இதனாலேயே, தொடர்ந்து பிரமாண்டமான பான் இந்தியா படங்களில் மட்டுமே நடிக்க தொடங்கினார் பிரபாஸ்.

ஆனால், சாஹோ, ராதே ஷ்யாம் என அடுத்தடுத்து வெளியான படங்கள் பாக்ஸ் ஆபீஸ்-ல் தோல்வியை தழுவின

இதற்கு நடுவே, RRR, புஷ்பா, போன்ற தெலுங்கு படங்களும், கன்னடத்தில் உருவான KGF 2 படமும் பாக்ஸ் ஆபிஸ்-ஐ அலறவிட்டது.

இந்த சூழலில்தான் 500 கோடி பட்ஜெட்டில் பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் படத்தின் அறிவிப்பு வெளியானது.

டீசர், ட்ரெய்லர், பாடல்கள் போன்றவைதான் முதலில் படத்தின் மீது கவனத்தை ஈர்க்கும். அதை தொடர்ந்து ஊர் ஊராக சென்று சம்மந்தப்பட்ட நட்சத்திரங்கள் அந்த படத்தின் புரோமோஷனை செய்வதன் மூலம் இன்னும் கூட கூட்டத்தை சேர்க்கலாம். இதையெல்லாம் தாண்டி படம் நன்றாக இருந்தால் மட்டுமே வசூலில் ஜொலிக்க முடியும்.

ஆனால் ஆதிபுருஷ்-ஐ பொறுத்தவரை, டீசரே சொதப்பலாக தான் இருந்தது. படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற வைக்க வேண்டிய டீசர், இந்த படத்தையெல்லாம் பார்க்க வேண்டுமா என்ற எண்ணத்தை தான் உருவாக்கியது.

கிராபிக்ஸ் மட்டமாக உள்ளது, நடிகர்கள் தேர்வு சரியில்லை, ராவணனின் கெட்டப் மொக்கையாக உள்ளது என நெகடிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்தன.

இதை ஓரளவுக்கு சரி செய்யும் விதமாக வந்தது ட்ரெய்லர்.

இது ஒரு பக்கம் என்றால், திருப்பதி கோவிலில் ஹீரோயினுக்கு இயக்குநர் முத்தம் கொடுத்தது, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் போஸ்டர் மற்றும் படம் உள்ளதாக ஆங்காங்கே வழக்குகள் தொடரப்பட்டது என தொடர்ச்சியாக சர்ச்சைகளிலும் சிக்கிய ஆதிபுருஷ், பாலிவுட்டின் பாய்காட் ட்ரெண்டிலும் இடம்பிடித்தது.

இதையெல்லாம் தாண்டி முதல் நாளில் ஒரு படம் ரூ.100 கோடி வசூல் ஈட்டுமா என சாதாரண ரசிகன் கூட கவனிக்க தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில், ஆதிபுருஷ் புக்கிங் எதிர்பார்த்த அளவு இல்லை என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தால் தான் 500 அல்லது 1000 கோடி வசூல் என்பது சாத்தியம். அந்த வகையில், தமிழ் டப்பிங் வெர்ஷனுக்கான புக்கிங் மிகவும் மந்தமாக உள்ளது. முதல் நாள் விமர்சனங்களை பார்த்துவிட்டு பின்னர் புக் செய்யலாம் என்ற எண்ணத்தில் பல ரசிகர்கள் உள்ளனர்.

பான் இந்தியா ஸ்டார் அந்தஸ்தை எப்போதோ பெற்றுவிட்ட பிரபாஸ், அதை தக்க வைப்பாரா..? பொறுத்திருந்து பார்ப்போம்.


Next Story

மேலும் செய்திகள்