"இங்க வந்து உன் ஆம்பளத்தனத்தை காட்டு.. மெட்ராஸ்ல இருக்குற தைரியத்துல பேசுறீயா" -கஸ்டமரை கண்டபடி திட்டிய ஆடியோ வைரல்
ராமநாதபுரம் அருகே பைனான்ஸ் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்ற லாரி ஓட்டுநரை, நிதி நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு தூண்டும் விதமாக பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இன்றைய காலக்கட்டத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பல நிதி நிறுவனங்கள் தோன்றியிருக்கின்றன...
ஹோம் லோன், பைக் லோன், கல்வி கடன் என மக்களிடம் பணத்தை வாரி இறைக்கும் நிதி நிறுவனங்கள், கொடுத்த பணத்தை வசூல் செய்யும் போதுதான் தங்களின் வேலையை காட்ட ஆரம்பிக்கிறார்கள்...
வறுமையின் காரணமாகவும், சில இக்கட்டான சூழ்நிலைகளினாலும் கடனை கட்ட தவறும் மக்களை மிரட்டுவது, அவர்களின் வீடு சென்று மரியாதைக் குறைவாக பேசுவது, வீட்டுப் பொருள்களை ஜப்தி செய்வது என நிதி நிறுவனத்தினர் செய்த சம்பவங்கள் பல உண்டு...
இதனால், பலர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் வருத்தத்திற்குரிய ஒன்று...
இவ்வாறு, வீடு கட்டுவதற்காக கடன் வாங்கிய லாரி டிரைவர் ஒருவரை, நிதி நிறுவன ஊழியர் தரக்குறைவாகவும், தற்கொலைக்கும் தூண்டும் விதமாகவும் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்தவர் எடிசன். லாரி ஓட்டுநரான இவர் தனது வீட்டை விரிவுப்படுத்தவும், புதிய அறை ஒன்றை கட்டவும் திட்டமிட்டிருக்கிறார்...
இதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை , சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே இயங்கி வரும் நிதி நிறுவனத்திடம் கடனாக பெற்றிருக்கிறார்...
இந்த தொகையை மாதம் 6000 வீதம் என லாரி ஓட்டி கட்டி வந்த எடிசன் , கடைசி மாதம் லாரியை எஃப்சிக்கு விட்டே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்...
இந்நிலையில், லாரி எஃப்சிக்கு சென்றதால், கடைசி மாதப் பணத்தை எடிசன் கட்ட தவறியதாக கூறப்படுகிறது...
இந்த சூழ்நிலையை நிதி நிறுவனத்தினடம் எடிசன் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில், ஊழியர்கள் தொடர்ந்து பணத்தை கட்ட வலியுறுத்தி வந்துள்ளனர்...
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர் பாலாஜி, எடிசனை தொடர்பு கொண்டு தரக்குறைவான தொனியிலும் பேசியது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது...