சென்னையில் உயிரிழந்த அசாம் தொழிலாளி... செய்வதறியாது திகைத்து நின்ற உறவினர்கள் - ஒரே நாளில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த தன்னார்வலர்கள்
சென்னையில் பணியாற்றி வந்த அசாம் மாநில தொழிலாளர் திடீரென உயிரிழந்த நிலையில், நெல்லை மாநகராட்சி ஆணையரின் மனிதநேயமிக்க நடவடிக்கையால், உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜான் குஜூர் என்பவர்,
சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி வேலை செய்து வந்தார். 26 வயதான ஜானுக்கு திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த குடும்பத்தினர், செய்வதறியாது, அசாம் மாநிலத்தின் ஹின்சுகியா பகுதியை சேர்ந்த மாவட்ட ஆட்சித் தலைவரை தொடர்பு கொண்டு உடலை கொண்டு வர உதவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அந்த மாவட்ட ஆட்சியரும் தன்னுடன் பயிற்சியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொண்டு இறந்தவரின் உடலை மீட்டு அசாமிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு கொண்டார். இதனை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் ஆதரவற்றோர் இல்லத்தின் பொறுப்பாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் உடனடியாக சென்னை வந்து அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி உடலை நல்ல முறையில் தமிழகத்தில் இருந்து அசாமிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அசாம் மொழியில் அவர்களது குடும்பத்தினருடன் பேசி, ஒரே நாளில் உடலை அனுப்பி வைத்த, நெல்லை மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தின் தன்னார்வலர்களின் செயல், பலரது பாராட்டை பெற்றுள்ளது.