RK சுரேஷை போலீஸ் நெருங்க நெருங்க.. அடுத்தடுத்து பிரியும் பல உயிர்கள்

x

ஆருத்ரா மற்றும் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடியாளர்களை போலீசார் வலை விரித்து நெருங்கி கொண்டிருக்கும் சூழலில், இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்திருக்கிறார்...

சினிமாவை மிஞ்சும் அளவில் தமிழகத்தில் பெரும் மோசடி சம்பவத்தை அரங்கேற்றின இரு பெரு நிறுவனங்கள்..

சுமார் 6 ஆயிரம் கோடிக்கும் மேல் மக்களின் முதலீடு பணத்தை மோசடி செய்தது ஐஃப்எஸ் நிதி நிறுவனம்....

அதிக வட்டி தருவதாக கூறி மக்களின் முதலீடு பணம் சுமார் 2 ஆயிரத்து 438 கோடி ரூபாயை சுருட்டிச் சென்றது ஆருத்ரா நிதி நிறுவனம்... இந்த இரு பெரும் மோசடி வலைக்குள் சிக்கிய ஏராளாமான பொதுமக்களால் தற்போது வரை அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை...

இதில், இரு நிறுவனங்களிலும் குறைந்த பணத்திற்கு அதிக வட்டி என்ற ஆசை வார்த்தையில் பல நடுத்தர வர்க்க மக்கள் ஏமாந்து, கடன் வாங்கி பணத்தை முதலீடு செய்திருப்பது தான் பெரும் சோகங்களில் ஒன்று....

இதுவரை ஆருத்ரா நிதி நிறுவனத்தில் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீதும், ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தில் 19க்கும் மேற்பட்டோர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பலரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளுமான ஆர்.கே.சுரேஷிற்கு ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் இந்த மோசடி விவகாரத்தை மேலும் சூடாக்கியது....

ஆருத்ரா நிதி நிறுவனத்தின் காஞ்சிபுர மாவட்ட ஏஜெண்டான நடிகர் ரூசோவிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் 15 கோடி ரூபாய் பணம் வாங்கியதாகவும், அந்த பணத்தில் ஆர்.கே. சுரேஷ் திரைப்படங்களை தயாரித்ததாகவும் பெரும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது...

இது தொடர்பாக ஆர்.கே. சுரேஷின் வங்கி கணக்கை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தியபோது, அதில் 15 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டது தெரியவர, அவரின் அலுவலக உழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

தொடர்ந்து வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஆர்.கே. சுரேஷை போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி தேடி வரும் நிலையில், இந்த மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கொரியர் பாய் ஒருவர் தற்கொலை செய்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

காஞ்சிபுரம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி. கொரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், அதிக வட்டிக்கு ஆசைபட்டு, ஐஎஃப்எஸ் மற்றும் ஆருத்ரா என இரு நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்திருக்கிறார்...

இந்த முதலீடு பணமே பலரிடம் இருந்து கடனாக பெற்ற பணம்தான் என கூறப்படும் நிலையில், நிதி நிறுவன மோசடி தொடர்பாக கடந்த ஒரு வருடமாகவே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் ராஜி...

இந்த வழக்கு விரைவில் முற்றுப்பெற்று, நிறுவனத்திடம் இருந்து பணம் திரும்பி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டிருந்த அவருக்கு, வழக்கு விசாரணை நீண்டு கொண்டே இருந்தது பெரும் மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறது. இதற்கிடையே, கடன்காரர்களின் கடும் நெருக்கடிக்கும் ஆளாகியிருக்கிறார்..

இந்நிலையில், தனது வீட்டில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பேரதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது... இதற்குமுன்பு காஞ்சிபுர மாவட்ட ஆருத்ராவின் ஏஜெண்டான கோவிந்தவாடியை சேர்ந்த விஜயபாஸ்கர் என்ற இளைஞர் திருமணத்திற்கு 6 நாட்கள் இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது...


Next Story

மேலும் செய்திகள்