நடிகர் அஜித்குமாரின் சாதனைகள் இவ்வளவா?
நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் இன்று... அவரது சாதனை பயணம் பற்றிய செய்தி தொகுப்பு..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் அஜித்குமார், 1971ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தார்.
பள்ளி படிப்பை பாதியில் விடுத்து மெக்கானிக், டெக்ஸ்டைல் தொழில் உட்பட பல்வேறு வேலைகளில் கவனம் செலுத்தியவர், பின்னர் மாடலாக மாறினார்..
இதன் பலனாக என் வீடு என் கணவர் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர், அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனானார். அதன் பிறகு ஆசை நாயகன், காதல் மன்னனாக கோலிவுட்டில் பிரபல நாயகனாக உருவெடுத்தார்.
அமர்க்களம் படத்தின் மூலம் ஆக்ஷன் நாயகனாக அவதரித்த அஜித்குமார், தன்னை நேசிப்போர் கூட்டத்தை விஸ்தரித்தார்.
ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து தோல்வி படங்களாக கொடுத்தாலும், மார்க்கெட்டை இழக்காமல் கோலிவுட்டின் முக்கிய ஹீரோவாக இருந்த பெருமை அஜித்திற்கு உண்டு...
வளர்ந்த நடிகர் என்ற இடத்தை நெருங்கும் நேரத்தில் ரசிகர் மன்றத்தை கலைத்தாலும், அதன்பிறகே புகழின் உச்சிக்கு சென்றார்.
சினிமா மட்டுமின்றி கார் பந்தயம், ட்ரோன்களை தயாரிக்கும் எம்.ஐ.டி குழுவிற்கு ஆலோசகர், அண்மையில் மாநில அளவிலான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் அங்கம் என அஜித்தின் இன்னொரு முகத்திற்கும் ரசிகர்கள் ஏராளம்...
தற்போது உலக பைக் சுற்றுலா என பைக்கை எடுத்து உலகை சுற்ற தொடங்கிவிட்டார் அஜித்குமார்.
தனக்கு பிடித்த துறைகளில் தனி கவனம் செலுத்தினாலும், பிரதான வேலையாக சினிமாவில் நடித்து வரும் அஜித்குமார், துணிவு படம் வரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவோரை குஷிப்படுத்தி வருகிறார்.
61 படங்கள் மூலம் தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரபல கதாநாயகனாக வலம் வரும் அஜித்குமார் பிறந்த தினம் 1971 மே ஒன்று...