எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன்... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
உள்ளாட்சி தேர்தல் தகராறு உள்ளிட்ட இரு வழக்குகளில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்தபோது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. அப்போது, தேர்தல் தகராறில் கொலை மிரட்டல் விடுத்து பேசியது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியது போன்ற பிரிவுகளில், கரூர் மாவட்டம் தாந்தோணி மலை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல், கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கரூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகளிலும் முன்ஜாமின் கோரி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இரண்டு வழக்குகளிலும் அவருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.