அப்படியே ரெவெர்ஸில் கொண்டு போன கிராமம்.. செல்போன் இல்லை.. மின்சாரம் இல்லை.. எப்போதும் ஒலிக்கும் கோவிந்தா, கோவிந்தா நாமம்
சிறு சாலை கொண்டு சென்றுவிடும் மலையடிவாரப் பகுதிக்கு சென்றால், காண்பது மெய்யா என வியக்க வைக்கிறது அங்கிருக்கும் அமைதியான காட்சிகள்....
கதிரவன் கரிசனம் காட்டுவதை சூழல் உணர்த்த, சாமரம் வீசும் காற்றும்... இசையாக ஒலிக்கும் கோவிந்தா நாமமும்... குருவிகளின் கீச்சீடுகளும் நம்மை வரவேற்கிறது.
புராண கதைகளில் காட்டப்படும் ஆசிரமம் போல காட்சியளிக்கும் இந்த கிராமம் அண்டை மாநிலமான ஆந்திராவின் ஸ்ரீகாக்குளத்தில் உள்ள கர்மா-கிராம்...
ஓடுகள், கூரைகள் வேயப்பட்ட மண் வீடுகள், பசும் சாணத்தில் மொழுகப்பட்டு மாவால் கோலம் போடப்பட்ட தளங்கள்.... விளக்கெறியும் மாடங்கள்... கிணற்றில் நீர் இறைப்பு, விவசாயம் செய்யும் சிறார்கள்... செக்காட்டும் பசுக்கள்... மேய்ச்சலுக்கு செல்லும் பசுக்கள் என காண்போரை அத்தனை அமைதியாக்கிறது
எப்போதும் கோவிந்தா நாமம் கேட்கும் கிராமத்தில் மின்சாரம் கிடையாது... செல்போன் நச்சரிப்புகள் கிடையாது...
60 ஏக்கர் பரப்பளவில் பரந்து கிடக்கும் கிராமத்திற்கு வருமானம் எல்லாம் விவசாயம் மற்றும் பசு வளர்ப்பிலிருந்து கிடைப்பதுதான்...
கிராமத்தில் 14 குடும்பங்களும் மற்றும் பிற கிருஷ்ண பக்தர்களும் வசிக்கிறார்கள்...
காலை 3:30 மணிக்கே எழுந்துவிடும் மக்கள் குளித்து மங்கள ஆரத்தியுடன் நாளை தொடங்குகிறார்கள். பெரியவர்கள் விவசாயம் செய்ய சிறார்கள் குருகுல கல்வியை பயில்கிறார்கள்.
பாண்டவர்கள் பயின்றது சிறார்களுக்கு கற்பிக்கப்படுகிறது. புனித நூல்களை படிக்கிறார்கள். மாலையில் அவர்களது விளையாட்டும், கலை நிகழ்ச்சிகளும், பாடல்களும் பெரியவர்களுக்கு இன்னிசை நிகழ்வாகிறது. இரவு உணவு அருந்தியதும் 7:30 மணியளவில் அன்றைய நாள் நிறைவடைகிறது.
ஐடி பணியில் லட்சங்களில் சம்பளம் வாங்கிவிட்டு கிராமத்திற்கு சென்ற சரண் தாசிடம் பேசினால், அதிக செல்வத்தால் வாழ்க்கையில் வலியே அதிகம், கிடைப்பதை கொண்டு அமைதியாக நலமாக வாழ்கிறோம் என்கிறார்.
எளிமையான வாழ்க்கை, உயர்ந்த எண்ணம் கோவிந்தனால் போதிக்கப்பட்டது, அவ்வழியில் தங்கள் பயணம் மகிழ்ச்சி நிறைந்ததாகவே இருக்கும் என கோவிந்த நாமம் சொல்லி செல்கிறார்கள்
அர்ஜென்டினா, ரஷ்யாவை சேர்ந்த வெளிநாட்டவர்களும் கிராமத்தில் அமைதியாக வாழ்வதாக சொல்கிறார்கள்.
வெளியுலகிலிருந்து அமைதியை நோக்கி வருவோரை வரவேற்கும் அவர்கள், அன்பை போதித்து தங்களது இயற்கையுடன் ஒன்றிய எளிய வாழ்க்கையை தொடர்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.