ஆசிரமத்தின் மர்மங்கள்..மாயமான பலர்..! பெண்களுக்கு பாலியல் தொல்லை.!முதியவர்களுக்கு அடி, உதை! - அம்பலமான அன்புஜோதி ஆசிரமம் பின்னணி

x
  • விழுப்புரம் அருகே குண்டலபுலியூர் கிராமத்தில் ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக அன்பு ஜோதி என்கிற பெயரில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
  • இந்த ஆசிரமத்தில் சேர்த்திருந்த தனது உறவினரை காணவில்லை என கூறி இளைஞர் ஒருவர் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆசிரமத்தில் சோதனை நடத்திய போலீசார், ஆசிரமம் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்ததை கண்டுபிடித்தனர்.
  • இதையடுத்து, ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களின் பட்டியல் மற்றும் விவரங்களை சேகரித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு, ஆசிரமத்தில் இருந்த பலர் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
  • ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எனப் பலர் தங்கியிருந்த நிலையில், அனைவரும் அடித்து துன்புறுத்தப்பட்டதும், பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானதும் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதன் பின்னர் ஆசிரமத்தில் இருந்து அனைவரையும் மீட்ட போலீசார், மருத்துவமனையில் சேர்த்து முழு உடல் பரிசோதனை செய்தனர். அவர்கள், அனைவரிடம் இருந்தும் வாக்குமூலம் சேகரித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், ஆசிரமத்தின் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரமத்தின் நிர்வாகி மற்றும் அவரின் மனைவி உட்பட 9 பேரை கைது செய்தனர்.
  • இந்த வழக்கில் ஆசிரமத்தை பராமரித்து வந்த தெலங்கானா, கேரளாவை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், ஆசிரமத்தில் தங்கியிருந்த கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவரே போலீசில் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது,. விசாரணையில், ஆசிரமத்தில் இருந்து மாயமானவர்கள் வியாபார ரீதியாக கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் தமிழகத்தின் பல இடங்களில் இருந்து தங்களது உறவினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரமத்தில் இருந்து மாயமாகியுள்ளதாக அடுக்கடுக்கான புகார்களை காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.
  • இதில், தென்காசியை சேர்ந்த நபர் ஒருவர், தனது மனநலம் பாதிக்கபட்ட தாயை ஆசிரமத்தில் 4 மாதங்களுக்கு முன்பு சேர்த்ததாகவும், சில நாட்கள் கழித்து தாயை சந்திக்க முயன்ற போது முதல் ஆறுமாதம் வரை சந்திக்க அனுமதியில்லை என ஆசிரமம் தெரிவித்த நிலையில், தற்போது மீட்கப்பட்டவர்களில் தனது தாய் இல்லை என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • இவ்வாறு இந்த விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்....
  • தற்போது, சிபிசிஐடி போலீசார் கையிலெடுக்க உள்ள இந்த வழக்கின் விசாரணையில் மர்மம் விலகி மாயமானவர்கள் மீட்கப்படுவர்களா ?... சம்பவத்தில் குற்றமிழைத்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?... உள்ளிட்ட பல கேள்விகள் சிபிசிஐடி போலீசார் பக்கம் திரும்பியுள்ளது....

Next Story

மேலும் செய்திகள்