தண்ணீரில் வாழும் அரக்கன்.. குழந்தையின் உயிரை குடித்த `அமீபா’.. மூளை தான் டார்கெட்..
அமீபிக் என்செபாலிடிஸ்...10,000ல் ஒருவருக்கு ஏற்படும் நோய்...வராது...வந்தால் கிட்டத்தட்ட மரணம் நிச்சயம்...
நேரே மூளையைக் குறி வைக்கும் இந்த அரியநோயால் கதிகலங்கிப் போயிருக்கிறது கேரளா...
கேரள மாநிலம் கண்ணூர் தோட்டா பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி தக்ஷினா... இவரது உயிரைத் தான் காவு வாங்கி இருக்கிறது "அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ்" என்ற அரிய நோய்...
கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி உற்சாகமாக மூணாருக்கு சுற்றுலா சென்றுள்ளார் தக்ஷினா... அங்குள்ள நீச்சல் குளத்தில் தனக்கு வரப்போகும் ஆபத்தை உணராமல் உற்சாகமாகக் குளித்தபோது தான் சிறுமியை அந்த அமீபா அரக்கன் தொற்றியிருக்க வாய்ப்புண்டு என்று கூறுகிறது மருத்துவமனை அறிக்கை...
அமீபா ஒருவரது உடலுக்குள் நுழைந்தால் வெறும் 5 நாள்களுக்குள்ளாக தன் வேலையைக் காட்டத் துவங்கி விடும்... ஆனால் தக்ஷினா சென்றதோ ஜனவரி 28...பாதிப்பை உணரத் துவங்கியதோ மே 8...
கடும் தலைவலி, வாந்தியால் அவதிப்பட்ட அக்குழந்தை கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது... ஆனால் நிலைமை தீவிரமாகவே உடனடியாக கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போதுதான் வெர்மமோபா வெர்மிஃபார்மிஸ் என்ற அமீபா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது...
இதற்கு முன்பும் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் நோயால் கேரளாவில் உயிர் பலிகள் நிகழ்ந்துள்ளன...
ஏன்?... கடந்த மே மாதம் கூட மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் நோயால் பலியானார்... மலப்புரம் காரியட் கடவு பகுதியில் தேங்கியிருந்த குட்டையில் குளித்ததால் அக்குழந்தைக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர்...
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்...
தொண்டை வலி, தலைவலி, பிரம்மை பிடித்தல், குழப்பம், குமட்டல், வாந்தி, அதீத காய்ச்சல், கழுத்து விறைப்பு - வலி, சுவை - வாசனையை உணர முடியாத நிலை, வலிப்பு - இவையெல்லாம் இதன் அறிகுறிகள்... ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு இது பரவுவதற்கு வாய்ப்பு மிக மிகக்குறைவு...
மூளை மற்றும் முதுகுத் தண்டைச் சுற்றியுள்ள செரிப்ரோஸ்பைனல் திரவத்தை பரிசோதிப்பதன் மூலம் நுண்ணோக்கி வழியே அமீபா புலப்படும்...
இந்த அரிய வகை அதே சமயம் மிகத் தீவிரமான நோயால் பாதிக்கப்படும் அபாயத்தைத் தடுக்க குறிப்பாக நன்னீர் நிலைகளில் குளிக்கும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்...
அசுத்தம் வாய்ந்த குளம், குட்டை, சரியான முறையில் குளோரினேற்றம் செய்யப்படாத நீச்சல்குளம் ஆகியவை இவற்றின் புகலிடம்...
நீர்நிலைகளில் குளிக்கும்போது ஒருவேளை நீர் மூக்கினுள் ஏறிவிட்டால் நுகர்தலுக்குதவும் நரம்பைப் பிடித்துக் கொண்டு நேரே மூளை வரை பயணித்து விடும் இந்த அமீபா...
அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிசிலுக்கு ஜில் தண்ணீர் என்றால் ஆகாது... எனவே அதற்கு பிடித்தமான வெதுவெதுப்பான தண்ணீர் இருந்தால் அதில் ஆர்வத்தில் குதிக்க வேண்டாம்... ஒருவேளை நீரில் இறங்கினாலும் மூக்கைப் பிடித்துக் கொள்வது சாலச் சிறந்தது... நீச்சல் குளங்களை தினம் தினம் சுத்தம் செய்வது நல்லது... குழாய்கள், நீர்த்தெளிப்பான்களை மூக்கின் அருகே கொண்டு செல்லாதீர்கள்...
மூளையைத் தாக்கும் இந்த அமீபா நோய் குழந்தைகளைக் குறிவைப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது...