சர்வதேச யோகா தினத்தையொட்டி கப்பலில் யோகா செய்து அசத்திய ஊழியர்கள்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஏராளமான மாணவர்கள் பல்வேறு வகையான யோகாசனங்களை கூட்டாக செய்து அசத்தினர். இதேபோல், நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் யோகாசனம் செய்தனர்.
பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதிகளும், நீதிமன்ற பணியாளர்களும் ஆர்வத்துடன் யோகாசனம் செய்தனர். இதேபோல் அங்குள்ள கல்லூரி மைதானத்தில் என்.சி.சி மாணவர்கள் யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிவகங்கையில் பாரம்பரியம் மிக்க மன்னர் மேல்நிலைப் பள்ளியில், யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு, மன அமைதி, உடல் வலிமை, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக யோகாசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறைமுக ஊழியர்கள் கப்பலில் யோகாசனம் செய்தனர். பத்மாசனம், வஜ்ராசனம், சிரசாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை துறைமுக அதிகாரிகள், மாலுமிகள் செய்து காண்பித்தனர்.