All Out-ஆன இந்திய அணி..மீட்டெடுத்த ரஹானே-தாகூர் ஜோடி..ஃபாலோ-ஆன் ஆகாமல் தப்பித்த இந்தியா
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வலுவான நிலையில் ஆஸ்திரேலியா உள்ளது. 3ம் நாள் ஆட்டத்தில் நடந்தவை என்ன?... பார்க்கலாம்...
முதல் இன்னிங்சில் 151 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில், 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி... முதல் ஓவரிலேயே போலண்ட் பவுலிங்கில் போல்டானார் பரத்... வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்த பரத், மீண்டும் ஒருமுறை தனக்கான வாய்ப்பை வீணடித்தார்.
அடுத்து களமிறங்கிய ஷர்துல் தாகூருடன் ரஹானே கைகோர்க்க, இந்த ஜோடி சரிவில் இருந்து இந்தியாவை மீட்டது. ஒருமுனையில் ரஹானே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ஆஸ்திரேலிய பவுலர்களை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறினார் ஷர்துல் தாகூர்... கம்மின்ஸ் வீசிய பந்து மூன்று முறை தாகூரின் கைகளைப் பதம் பார்த்தது.
என்றாலும் ரஹானேவுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை தாகூர் வெளிப்படுத்த, 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 109 ரன்கள் சேர்த்தது. 89 ரன்களுக்கு கிரீனின் அற்புதமான கேட்ச்சால் ரஹானே ஆட்டமிழந்தார். ரஹானே-ஷர்துல் ஜோடியின் செஞ்சுரி பார்ட்னர்ஷிப்பால் பாலோ-ஆன் ஆகாமல் இந்தியா தப்பித்தது.
ரஹானே ஆட்டமிழந்தாலும், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் அரைசதம் அடித்தார். இதன்மூலம், ஓவல் மைதானத்தில் தொடர்ச்சியாக 3 அரைசதம் அடித்த 3வது வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் தாகூர் பெற்றார்.
51 ரன்களுக்கு தாகூர் ஆட்டமிழக்க, 296 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் இந்தியா ஆல்-அவுட் ஆனது. இதனால், இந்தியாவைக் காட்டிலும் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 173 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இதனையடுத்து, 2வது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் 1 ரன்னில் சிராஜ் ஓவரில் ஆட்டமிழந்தார். 13 ரன்களுக்கு கவாஜாவை உமேஷ் யாதவ் வெளியேற்றினார். 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்த நிலையில், ஸ்மித்-லபுஷேன் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
34 ரன்களில் ஜடேஜா ஓவரில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு, ஸ்மித் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். அடுத்த சில ஓவர்களிலேயே டிராவிஸ் ஹெட்டும், ஜடேஜா பவுலிங்கில் caught and bowled ஆனார். முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய இருவரையும் வெளியேற்றி, ஜடேஜா அசத்தினார்.
3ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து உள்ளது. லபுஷேன் 41 ரன்களுடனும், கிரீன் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 296 ரன்கள் முன்னிலைப் பெற்று ஆஸ்திரேலியா வலுவான நிலையில் உள்ள நிலையில், 2 நாட்கள் எஞ்சி இருக்கும் ஆட்டத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.