வயதான தம்பதியிடம் வீடு வாங்கி மோசடி செய்த 'ஆருத்ரா'வின் ஏஜென்ட் - உதவி செய்த SI-க்கு காத்திருந்த ஆப்பு
காஞ்சிபுரத்தில், 25 லட்சம் ரூபாய் வீட்டை, 6 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாற்றி வாங்கிய வழக்கில், ஆருத்ரா நிதி நிறுவன முகவருக்கு உதவிய காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
காஞ்சிபுரம் மாவட்ட ஜெம் நகர் பகுதியில் வசிப்பவர்கள் ஸ்டீபன் - சுகுணா தேவி வயதான தம்பதியினர். இவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் மனை இருந்துள்ளது.
உத்திரமேரூர் மானாமதி பகுதிகளில் செயல்பட்டு வந்த ஆருத்ரா நிதி நிறுவனத்தின் முகவராக இருந்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர், அந்த வீடு மற்றும் மனையை 26 லட்சம் ரூபாய்க்கு விலை பேசியுள்ளார்.
அதில், 6 லட்சம் ரூபாய் பணத்தை மட்டும் கொடுத்து, பத்திரப்பதிவு செய்துள்ளார். மீதமுள்ள 20 லட்சம் ரூபாய் பணத்தை, ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து, வயதான தம்பதியிடம் வட்டியை பெற்றுக் கொள்ளுமாறு ஏற்பாடு செய்துள்ளார்.
இதனிடையேதான், ஆருத்ரா நிதி நிறுவனம் மோசடி வழக்கில் சிக்கி, அந்த நிறுவனம் மூடப்பட்டது. மேலும், அந்த நிறுவனத்திற்கு தொடர்பான நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அதன் படி, ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முகவராக இருந்த நாகராஜூம் கைது செய்யப்பட்டார்.
வயதான தம்பதிகளான ஸ்டீபன் மற்றும் சுகுணா தேவி தம்பதியினர், அந்த வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர்.
தற்போது ஜாமினில் வெளியே வந்த நாகராஜ், தனது அடியாட்களுடன் சென்று முதியவர்கள் தங்கி இருந்த வீட்டிலிருந்து அனைத்து பொருட்களையும் வெளியே எடுத்து வீசிவிட்டு, வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட தம்பதி இதுதொடர்பாக புகார் அளித்த நிலையில், இந்த சம்பவத்தில், காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய உதவி ஆய்வாளர் வெஸ்லி, ஆருத்ரா முகவருக்கு ஆதரவாக பேசி வயதான முதியவர்களை மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.
இதுதொடர்பாக, காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட தம்பதி புகார் அளிக்கவே, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு, நாகராஜை போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
இந்த விவகாரத்தில், அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக காவல் உதவி ஆய்வாளர் வெஸ்லி மீது புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில், உண்மை என தெரியவந்ததால், காவல் உதவி ஆய்வாளர் வெஸ்லி ஆயுதப்படைக்கு மாற்றி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுதாகர் நடவடிக்கை மேற்கொண்டார்.